தற்கால இலக்கியக் கட்டுரைகள்

சிற்பி வடித்த சங்க ஓவியங்கள்

முனைவர் மு. பழனியப்பன்

தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி
திருவாடானை
9442913985
புதுக்கவிதை உலகில் குறிக்கத்தக்க மூத்த கவிஞர்களுள் ஒருவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். இவர் வானம்பாடி இயக்கக் கவிஞர். பாரதிதாசன் பரம்பரையில் வந்த பாவலர். தேர்ந்த கட்டுரையாளர், மேடைக்கவிஞர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், இலக்கிய வரலாற்று ஆசிரியர், பேராசிரியர் என்று பன்முக ஆளுமை கொண்டு தமிழகத்தின் தற்கால இலக்கியப் போக்கிற்குத் தடம் வகுத்துத் தருபவராக விளங்கி வருகிறார். புதுக்கவிதையின் குறியீட்டுப்பாங்கிற்கு இவரின் சர்ப்ப யாகம் அசைக்கமுடியாத சான்று. கவிதை நாடகத்திற்குப் பாரதி கைதி எண் 253 என்பது அழிக்க முடியாத சான்று. இவரின் கிராமத்து நதி கிராமத்துப் பண்பாடுகளின் பதிவேடு. இப்படிப் பற்பல படைப்புகளைத் தந்த படைப்புக்கலை வித்தகர் சிற்பி ஆவார். இவரின் கவிதைகளில் சங்க இலக்கியத்தின் தாக்கங்கள் விரவிக்கிடக்கின்றன. தமிழை ரசித்து, ருசித்துப் படித்த பாவலர் சிற்பி என்பதால் அவரின் கவிதைகளில் சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை தாக்கம் பெற்றுத் திகழ்கின்றன. இத்தாக்கம் இவர் கவிதைகளுக்கு மேலும் உரமூட்டுவனவாக அமைவனவாகும். இவரின் கவிதைகளில் காணலாகும் சங்க இலக்கியச் சாயல்களை இக்கட்டுரை முன்வைக்கின்றது.
தமிழில் வளம் கூட வேண்டும் என்பது கவிஞர் சிற்பியின் ஆசை. அது நிறைவேறும் காலத்தை அவர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். தன்னுடைய மனையாள் குழந்தையுடன் இவர் அருகில் அமர்ந்திருக்க அவ்வினியாளிடம் தமிழ் வளர்ச்சி பற்றிப் பேசுகின்றார்.
விண்மீன்கள் துள்ளுகின்ற
                    விரிவானம் போலே
                   எண்ணமில்லாப் பெருநூல்கள்
                   இளந்தமிழில் வேண்டும்.
                  உறவாடும் இருளோடே
                 ஒளியோட்டம் போலே
                 திறமான பழமையுடன்
                 செழிக்கட்டும் புதுமை (சிற்பி கவிதைகள், தொகுதி.1.ப.72
என்ற சிற்பியின் கவியடிகளில் பழமையும், புதுமையும் தமிழுக்கு வேண்டும் என்ற அவரின் ஆசை வெளிப்படுவதைக் காணமுடிகின்றது. சங்ககாலத் தமிழ் முதலான பழமையும், தற்கால இலக்கியம் போன்ற புதுமையும் சிறக்கத் தமிழ் தழைக்கவேண்டும் என்பது சிற்பியின் ஆசையாகும்.
                                          சங்கத் தமிழ் இனிமை பற்றிச் சிற்பி
                                           மூண்டுவரும் கவிதை வெறிக் குணவாய் எங்கள்
                                           முத்தமிழே நீயுள்ளாய் முன்னம் ஓர்நாள்
                                             பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய்
                                              பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய்
                                               மீண்டுமந்த பழமைநலம் புதுக்குதற்கு
                                                மெய்ச்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே கூவி வா வா
                                                கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம்போல்
                                                குளிர்ப் பொதிகைத் தென்தமிழே சீறி வா வா.
                                                                         (கவிஞர் சிற்பி கவிதைகள் தொகுதி.1. .ப75)
என்ற இந்தப் பாடலில் சங்கத் தமிழைப் புதுக்கவேண்டும் என்பது தன் எண்ணம் எனச் சிற்பி வெளிப்படுத்துகின்றார். இதன் காரணமாகச் சங்க இலக்கியப் பழமையைப் பண்பாட்டைப் புதுக்கும் சிந்தனையும், செயல்பாட்டையும், கவியாற்றலையும் உடையவர் சிற்பி என்பது தெரியவருகிறது.

முதற்பொருள்
சங்கப் பாடல்களில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியன நிலத்தின் சூழலுக்கு ஏற்பப் பயின்றுவரும். இவ்வடிப்படையில் சங்க இலக்கியச் சாயலில் முதற்பொருளுள் ஒன்றான நில வடிவங்களைத் தம் கவிதைகளில் புனைந்துரைக்கிறார் சிற்பி.
மலைச்சாரல் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை குறிஞ்சி சில இயல்பைச் சங்க மரபில் நின்று காண்கின்றது.
                          மாங்கனியை அணிலெறிய
                          மதயானை வேடர்
                         ஓங்குகவண் கல் என்றே
                        ஓடிடும், ஓர் புதரில்
                         மூங்கிலிடை             மூண்ட புகை
                        முகிலென்றே எண்ணித்
                        தீங்குரலிற் பாடுகுயில்
                        திடுக் கென்றே நிறுத்தும்
                        வானிருள மலை வேடன்
                        வழி தவாறதிருக்க
                        தானொலிக்கும் குரலுணர்ந்து
                          தடலேற்றி நின்றே
                          கான் குறத்தி எதிரொலிப்பாள்
                          காட்டினிடை எங்கோ
                           ஊன் கிழித்த சிறுவேங்கை
                            உண்ணாதே நீங்கும் (சிற்பி கவிதைகள். முதல்தொகுதி, ப.120,121)
என்ற பகுதியில் குறிஞ்சி நிலத்தின் அழகைப் பாடுகிறார் சிற்பி.

     அகநானூற்றில் இடம்பெறும் ஒரு பாடலில் குறத்தியின் ஒலிகேட்டு குறவர்கள் ஓடிவரும் காட்சியின் சாயலில் மேற்பாடல் அமைந்துள்ளது.
                        வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்
                           கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்
                           பொன்நேர் புதுமலர் வேண்டிய குறமகள்
                             இன்னா இசைய பூசல் பயிற்றலின்
                             ஏகல் அடுக்கத்து இரள் அளைச் சிலம்பின்
                             ஆகொள் வயப்புலி ஆகும் அஃது எனத்தம்
                               மலைகெழு சீரூர் புலம்பக் கல்லெனச்
                                 சிலையுடை இடத்தர் போதரும் நாடன் (அகநானூறு, 52)
குறவர் மகளிர் வேங்கை மரத்தில் பூப்பறிக்க வந்தபோது அம்மரத்தின் நிலையைப் பார்த்துப் புலி புலி என கத்துகின்றனர். அவ்வொலி காடுகள் முழுவதும் எதிரொலிக்க அதனைக் கேட்ட குறவர்கள் பசுக் கூட்டத்தைக் கொல்லப் புலி வந்தது என்று விரைந்து வந்தனர்; இந்நிகழ்வின் வழியாக குறத்தியர் கத்துவதும் அதனைக் கேட்டுக் குறவர் வருவதும் இயல்பு என்பதை உணரமுடிகினறது. சிற்பியின் பாடலில் வழிதவறாது இருக்கக் குறவனுக்குத் துணையாக குறத்தி ஒலி எழுப்புகிறாள் என்றுக் குறிஞ்சிக் காட்சிவந்துள்ளது.
நெய்தல் நிலக் காட்சியொன்றும் சிற்பியின் எண்ணத்தில் சங்க இலக்கியங் சாயலுடன் திகழ்கின்றது.
~~ஓலமிடும் ஆழ்கடலின் மேலே- பரந்
தோங்கி வரும் தேனலைகளாலே – வரிக்
கோலமிடும் நண்டு விரைந்
தோடி மணற் பூந்துகளில்
ஒளிக்கும் உடல்
நெளிக்கும்
நாட்டியப் பெண் ஆடிவரும் மேடை- எழில்
நங்கையவள் மேல் பறக்கும் ஆடை –தனைக்
காட்டுதல்போல் வெள்ளியலை
கண்கவரவே பரதம்
பயிலும் சங்கு
துயிலும் (சிற்பி கவிதைகள்,தொகுதி.1. ப.122)
என்ற இப்பாடலில் நெய்தல் நில அழகைப் பாடுகின்றார் சிற்பி.
சிற்பி கண்ட நண்டுகளின் காட்சி கலித்தொகையில் நெய்தல் திணைப் பாடல் ஒன்றினோடு இயைபுடையதாக அமைகின்றது.
~~இவர் திமில் எறிதிரை ஈண்டி வந்து அலைத்தக்கால்
உவறுநீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளைவரித்
தவல்இல் தண் கழகத்துத் தவிராது வட்டிப்பக்
கவறுற்ற வடு ஏய்க்கும் காமர் பூங்கடற் சேர்ப்ப(கலித்தொகை 136)
என்ற பாடலில் படகுகள் கட்டப்பெற்றிருக்கும் கடற்கரைப் பகுதியில் அலைகள் வீசுவதால் தண்ணீர் பாய்கின்றது. இதன் காரணமாக வளையில் இருக்கும் நண்டுகள் உடனே வெளிவருகிறது. மணற்பரப்பில் ஈரமில்லாத இடத்திற்கு அவை விரைந்தோடுகின்றன. இவ்வாறு ஓடும் நண்டின் காலடித்தடங்கள் சூதாடும் காய்கள் உருட்டுவதால் ஏற்பட்ட வடுவைப் போன்று இருந்தன என்கிறார் நெய்தல் பாடிய நல்லந்துவனார்.
உரிப்பொருள்
சங்க இலக்கியங்களில் காணப்படும் ஒழுக்கும் உரிப்பொருள் எனப்படுகின்றது. மருதநிலத்தின் உரிப்பொருளை மையமாக வைத்து அந்நிலம் சார்ந்த கவிதை ஒன்றைப் படைத்துள்ளார் சிற்பி. இது தலைவன், தலைவி ஆகியோர் கூற்றாகவும் விளங்குகின்றது. எனவே இக்கவிதை சங்க இலக்கிய கூற்று முறையில் அமைந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.
தலைவியைக் குறியிடத்திற்கு வரச்சொல்லிவிட்டுத் தலைவன் சற்று நேரங்கழித்துக் குறியிடத்திற்கு வந்து சேருகிறான். அப்போது தலைவி அவனுடன் ஊடுகிறாள்.
~~தலைவி:  முத்துநிலாவினில் முத்தம் குலாவிட
முந்துக என்று சொல்லி – என்
சித்தம் அதிர்ந்திடத் தாமதம் செய்தனை
செய்யத் தகும் செயலோ? – இது
செந்தமிழர் மரபோ?
தலைவன்: ஓவியக் காதலி உன்னழகார்ந்திட
உள்ளம் துடித்துவந்தேன்- விண்ணில்
தூவிய செக்கரில் மாதுளைக் கன்னத்தில்
செவ்வொளி கண்டதனால் – விழி
கவ்வ மயங்கி நின்றேன.
தலைவி: உள்ளத்தில் வேறெந்த ஒள்ளிழைக்கும் இடம்
ஓர் துளி இல்லை என்றாய் – இன்று
கள்ளத்தில் யாரையோ கண்டு களித்தனை
காதல் மகள் எவளே? – உன்றன்
சூதில் மகிழ்பவளோ?
தலைவன்: அன்புக்கோர் தையலே அழகின் புதையலே
அள்ளி அணைக்க வந்தேன் -அடி
உன்னுடைச் செவ்விதழை ஓர்மலர் காட்டிட
உள்ளம் விடுத்து நின்றேன் -அதைக்
கள்ளத்தில் காதலித்தேன் | (சிற்பி கவிதைகள்முதற்தொகுதி, ப. 99)
என்ற பாடலில் ஊடலும் ஊடல் நிமித்தமுமாகிய மருத நில உரிப்பொருள் கூற்று அடிப்படையில் விளக்கம்பெற்றுள்ளது.
~தீம்பெரும் பொய்கை ஆமைஇனம் பார்ப்புத்
தாய்முகம் நோக்கி வளர்ந்திசினாஅங்கு
அதுவே ஐய நின் மார்பே
அறிந்தனை ஒழுகுமதி அறனுமார்அதுவே (ஐங்குநூறு, 44)
என்ற இப்பாடலில் தாய்முகம் பார்க்கும் அமைக்குட்டிகளைப் போல தலைவன் முகம் நோக்கி வாழ்கிறாள் தலைவி. அவளை விலகாமல் அணுகுவது தலைவனின் கடனாகின்றது. இந்தப் பாடலின் கருத்தைச் சிற்பிப் பாடலின் மேற்கருத்துடன் இயைத்தால் சங்க இலக்கியத் தன்மைகளைச் சிற்பி பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவரும்.

நீலி
சங்க இலக்கியங்களில் பழையனூர் நீலி பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. தன்னை ஏமாற்றிக் கொலை செய்த கணவனை மறுபிறப்பில் கொன்ற பேயாக நீலி கருதப்பெறுகிறாள். இவள் முற்பிறப்பில் நவஞ்ஞாய் என்னும் பார்ப்பனப் பெண்ணாகப் பிறந்தாள். இவளின் தந்தை ஒருநாள் காஞ்சியிலிருந்து வந்திருந்த புவனபதி என்ற அந்தணனை உணவு உண்ண இல்லத்திற்கு அழைத்து வந்தார். உணவு உண்ண வந்தவர் நவஞ்ஞாய் மீது காதல் கொண்டு அவளை மணம்புரிந்துகொள்ள எண்ணினார். அவரின் எண்ணமும் நிறைவேறியது. குழந்தை ஒன்றும் பிறந்தது. சில நாட்களில் காஞ்சிக்குக் கிளம்பவேண்டிய நிலையில் புவனபதி தயாரானார். நவஞ்ஞாயும் உடன் வருவேன் என்று சொல்ல அவளையும் அவள் குழந்தையையும், தன் மைத்துணனையும் அழைத்துக்கொண்டு அவர் கிளம்பினார். காஞ்சிபுரத்தில் முன்பே இவ்வந்தணருக்கு மணம் முடிந்து ஒரு குடும்பம் இருந்தது. இதன் காரணமாக நவஞ்ஞாயைக் கொன்று விட எண்ணி அவளையும் அவள் குழந்தையையும் தண்ணீர் எடுத்துவர மைத்துணனை அனுப்பி விட்டு கொலை செய்துவிடுகிறான். தண்ணீர் எடுத்து வந்த மைத்துணன் இதனைக் கண்டு அங்கிருந்த மரத்தில் தூக்கு போட்டுத் தற்கொலை புரிந்து கொண்டான்.
மறுபிறவியில் திருவாலங்காட்டுக்கு அருகில் உள்ள பழையனூரில் நீலன், நீலி என்று இவர்கள் பிறந்தனர். இவர்கள் பகலில் நல்லவர்களாகவும், இரவில் ஆடு, மாடுகளை அழிக்கும் பேய்வடிவங்களாகவும் விளங்கினர். தரிசனச் செட்டியின் மகனாகத் தன் கணவன் பிறந்துள்ளான் என்பதை அறிந்து அவனைக் கொன்றுவிட நீரி அலைகிறாள். தரிசனச் செட்டியின் மகன் தன்னை ஒரு பேய் கொல்லப்போகிறது என்பதைச் சோதிடர்கள் வாயிலாக அறிந்து மந்திரவாள் ஒன்றை வைத்திருந்தான். மேலும் பழையனூர் வேளாளர்களிடம் அவன் அடைக்கலம் புகுந்திருந்தான். இவ்வேளாளர் எழுபது பேரையும், மந்திரவாள் வைத்திருந்த தன் கணவனிடம் அது போகும் படிச் செய்து அவனையும் கொன்றழிக்கிறாள் நீலி. இதுவே நீலி கதை. இக்கதையைச் சிற்பி எடுத்தாளுகின்றார்.
மறுபிறவியில் தரிசனச் செட்டியின் புதல்வனாகப் பிறந்தவன் பேய் கண்டு அலறும் நிலையில் இக்கவிதைப் படைப்பினைத் தொடங்குகிறார் சிற்பி. இதன் பிறகு அவன் சோதிடரிடம் சென்று கேட்க அவர் ஒரு கிணற்றைக் காட்டுகிறார். அங்குதான் அந்தப்பெண்ணை மூழ்கச் செய்து அவன் கொன்றான். அந்த பயத்துடன் இருந்த அவனுக்கு மணம் ஆகின்றது. வந்தவள் நீலி. ஆனால் இதனை ஊரார் அறியாமல் அவனுக்கு மணம் முடிக்கக் காலையில் பிணமானான் தரிசனச் செட்டியின் மகன். இதன் காரணமாக தன்னிடம் அடைக்கலமான பொருளைக் காக்க இயலாமல் கைவி;ட்டதால் நெருப்பில் விழுகின்றனர்.
~இறந்த நல்லவர்க்கு என்னுடைய அனுதாபம்
கதைசாரம் அதுவல்ல.
பெண்ணுக்குத் துரோகம் செய்தவரை
எத்தனை ஜன்மம்
எடுத்தாலும் விடமாட்டாள் பெண்
புரிந்ததா? (சிற்பி கவிதைகள் இரண்டாம் தொகுதி, ப. 1422)
என்ற நிலையில் நீலி கதையை எழுதுகிறார் சிற்பி. இக்கதையில் நீலி சிற்சில மாற்றங்களைச் செய்து கொண்டுள்ளார். தரிசனச் செட்டியின் மகன் முற்பிறவியில் பரத்தையின் தொடர்பு காரணமாக நீலியைக் கொன்றதாகக் காட்டுகிறார். மேலும் சிற்பியின் இக்கதையில் நீலியின் அண்ணன் பற்றிய குறிப்புகள் இல்லை. குளத்தில் தள்ளிவிடப்படும் காட்சி அவலம் மிக்கதாக வடிக்கப்பெற்றுள்ளது.
சிற்பி பார்வையில் பூம்புகார் நகரம்
சிற்பி பட்டினப்பாலையில் காட்டப்படும் பூம்புகார்க் காட்சிகளை நவீனப்படுத்திக் கவிதையாக்கியுள்ளார். புகாரில் ஒரு நாள் என்ற கவிதை சங்க காலத்திற்குத் தற்கால மக்களை அழைத்துச் செல்கின்றது.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழனை மாதரசி ஒருத்தி சங்க காலச் சமுதாயத்திற்கு அழைத்துச் சென்று காட்டுகின்றாள்.
~தோய்ந்தோடும் ஆறுபோல் தோன்றும் நடுத்தெருவில்
பாய்ந்தோடும் முத்துத் தேர்! பல்லக்கு! பொற்சிவிகை!
வெள்ளிக் கடிவளா வெண்புரவி அத்திரிகள்
…. வானுயர்ந்த மாடங்கள்
மான்விழியின் சாளரத்து மாளிகைகள் வீதிகளில்
தேனலர்;ந்த பூவின் சிறுமாவைக் கட்டுபவர்
பூம்பருத்தி யாடை புனைகின்ற வித்தகர்கள்
தேம்பாகு பண்ணியங்கள் செய்தளிக்கும் வல்லவர்கள்
தானியங்கள் கூலம் தரம்பார்க்கும் வணிகர்கள்
ஏனை நவமனிகள் ஈடறிந்த மேலாளர்
விண்ணமுத மெல்லிசையால் மண்மயக்கம் பாணர் குழாம்
கண்ணில் கலை நிறுத்தக் கற்ற தொழிலாளர்
தாழ்வின்றிப் பூம்புகார் தாங்கம் பெருமக்கள்
வாழ்வெல்லாம் கண்டு வழிநடந்தேன்…
இந்த மருவூர்ப்பாக்கம் இப்போது நீங்கிவிட்டால்
முந்தும் சீர்ப் பட்டினத்துப் பாக்கம் அடுத்திருக்கும்
ஆர்புனைந்த சோழன் அரசிருக்கும் ஓங்குமனை
பாரளக்கம் வாணிகர்தம் சீரளக்கும் பேரில்லம்
போர்நடத்தும் ஏரோர் கலைநடத்தும் கூத்தியர்கள்
வாழும் தெருக்கள் வளத்தினையும் காணாயோ?
வச்சிரத்து வேந்தன் வழங்கும் கொற்றப் பந்தர்
நச்சி அவந்தியர் கோன் நல்கும் மணிவாசல்
மாமகத நாட்டான் மகிழ்ந்தளித்த பட்டிமன்றம்
நீ பாராய் என்றாள். நெடும்பட்டி மண்டபத்துள்
அன்று சமயங்கள் ஆயும் சமணர்களும்
மன்றில் பவுத்தர்களும், வைணவரும், சைவர்களும்
ஞானத் தவிசேறி நாநலத்தால் இப்புவியின்
மானிடரின் பேரிடர்க்கு மாமருந்தை ஆய்ந்திருந்தார்
சற்றே வழிநடந்தோம்… நாயகியாள் சுட்டுவிரல்
உற்றொருபால் ஐந்தாய் உயர்மன்றம் காட்டிற்று
கட்டபொருளேற்றிக் கள்வர் கழுத்தொடிய
வெட்ட வெளியரங்கில் வேடிக்கை காட்டுமிடம்
ஈதே என்றாள். மற்றொரு பால் எப்பிணிக்கும் எந்நோய்க்கும்
தீதகற்றும் தேன் இலஞ்சி மன்றத்தைக் காட்டினாள்
வஞ்சனைக்கும் நஞ்சுக்கும் மாற்றளிக்கும் ஓர்மன்றம்
கொஞ்சம் அறம்பிழைத்தால் கொட்டுகின்ற கண்ணீரை
வார்க்கும் ஒருபாவை வாய்ந்த பெருமன்றம்
கார்குழலி காட்ட நான் கண்டேன் வியப்புற்றேன்.
(சிற்பி கவிதைகள், முதல்தொகுதி 179-181)
என்ற இந் நெடுங்கவிதையில் பத்துப்பாட்டின் தாக்கத்தை உணரமுடிகின்றது.
பட்டினப் பாலையில் காட்டப்பெறும் தெருவின் அழகு பின்வருமாறு.
~~குறுந்தொடை, நெடும்படிக்கால்
கொடுந்திண்ணைப் பல்தகைப்பின்
புழைவாயில் போகுஇடைக்கழி
மழைதோயும் உயர்மாடத்துச்
சேவடிச் செறிகுறங்கின்
பாசிழைப் பகட்டு அல்குல்
தூசுடைத் துகிர்மேனி
மயிலியல் மான்நோக்கின்
கிளிமழலை மென்சாயலோர்
வளிநுழையும் வாய்பொருந்தி
ஓங்குவரை மருங்கின் நுண்தாது உறைக்கும்
காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன
செறிதொடி முன்கை கூப்பி (பட்டினப்பாலை- 142- 154)
என்ற இப்பகுதியில் புகார்நகரத்தின் தெரு அழகாகக் காட்டப்பெறுகின்றது. இப்பெரிய அடிகள் மான்விழி சாளரத்து மாளிகை வீதி என்று சிற்பியால் குறிக்கப்படுகிறது.
புகாரில் வி;ற்ற பொருள்களை
~~நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் கொன்றும்
குடமலைப் பிறந்த ஆரமும்அகிலும்
தென்கடல் முத்தும், குணகடல் துகிரும்
கங்கை வாரியும், காவிரிப்பயனும்
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகின்
(பட்டினப்பாலை, 183- 192)
என்ற பகுதியில் விற்ற பொருள்களின் பட்டியல் தரப்பெறுகிறது. இதையே சிற்பி தன் கவியடிகளில் முன்பு காட்டியுள்ளார். இதுபோன்று பல்வகை மன்றங்கள் இருந்த செய்தியைப் பட்டினப்பாலை எடுத்துரைக்கின்றது. (அடிகள் 160- 180)
இவ்வகையில் பழந்தமிழகத்தைக் காட்டிய பெருமாட்டியை நினைவிற்கு வந்த பிறகு காணாது தவிக்கின்றார் கவிஞர். பூம்புகார் சென்றபோது அந்தக்காலப் பூம்புகாரும் இந்தக்காலத்தில் கட்டைக் கனலாய்க் கிடக்கும் பூம்புகாரும் அவர் மனதில் ஒட்டி வைத்து எண்ணப்படுகின்றன.
பழமையின் சிறப்பையும், புதுமையின் வெறுமையையும் ஒன்றாக்கிக் காட்டும் கற்பனை ஒட்டிணைவுக் கவிஞர்களுக்கு மட்டுமே உரிய தனித்தன்மை. அதனைச்சிற்பி இங்குக் காட்டியுள்ளார்.
இவ்வகையி;ல் சிற்பி வடித்த சங்க ஓவியங்கள் பழம்பெருமையைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்வனவாக உள்ளன.
-------------------------------------------------------------------------------------------
மாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியத் தாக்கம்
முனைவர் மு. பழனியப்பன்
தமிழாய்வுத்துறைத் தலைவர்
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
சிவகங்கை

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் கூர்ந்து நோக்கப்பட வேண்டியனவாகும். தொடர்ந்து தமிழக இலக்கிய வளர்ச்சியோடு இணைந்து போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்துவரும் இலங்கைத் தமிழ் இலக்கியம் தற்போது புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக உலக நாடுகளில் பரவி நிற்க வேண்டிய சூழலை அடைந்துள்ளது. கி.பி. 1983 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் அரசியல் சூழல் காரணமாகப் புலம் பெயர்தல் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. புலம் பெயர்தல் வழியாகப் பல தரப்பட்டவர்களும் வெளியேற வேண்டிய சூழல் உருவானபோது எழுத்தாளர்களும் புலம் பெயர்ந்து எழுதத் தொடங்கினார்கள். கருணாமூர்த்தி ஷோபா சக்தி சை.பீர் முகம்மது முருகப+பதி மாத்தளை சோமு அ.முத்துலிங்கம் போன்றோர் இன்றைய நிலையில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களில் குறிக்கத்தக்கவர்கள் ஆவர்.

மாத்தளை சோமு தமிழகத்தின் ப+ர்வீகக் குடியினர் என்றாலும் இலங்கையில் வாழ்ந்தவர். தற்போது புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளவர். தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் சில காலம் அவ்வப்போது உறைந்துவருபவர். நாவல்கள் சிறுகதைகள் பயணக்கட்டுரைகள் ஆய்வுக்கட்டுரைகள் எனப் பலவற்றை எழுதி வருபவர். இவரின் சிறுகதைகள் தொகுக்கப் பெற்று மாத்தளை சோமுவின் கதைகள் என்று இரு தொகுதிகளாக வந்துள்ளன. இவர் ~~வியக்கவைக்கும் தமிழர் அறிவியல்|| ~~வியக்கவைக்கும் தமிழர் காதல்|| ஆகிய கட்டுரை நூல்களைப் படைத்தளித்துள்ளார். இவ்விரு நூல்களும் செம்மொழித் தமிழ் இலக்கியங்கள் வழியாகத் தமிழர் அடையாளத்தை வெளிப்படுத்துவனவாகும். மேலும் இவர் திருக்குறளுக்கு அறிவியல் நோக்கில் ஓர் அகல உரையைத் தந்துள்ளார். இவை இவர் செம்மொழித் தமிழ் இலக்கியங்களின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டினை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.
இக்கட்டுரையில் மாத்தளை சோமுவின் சிறுகதைகள் – தொகுதி இரண்டு- என்ற தொகுப்பில் செவ்விலக்கியத் தாக்கம் பெற்ற கதைகள் மட்டும் எடுத்துக் கொள்ளப் பெற்று அவற்றின் திறம் ஆராயப் பெறுகின்றன.
~தமிழில் சங்க கால இலக்கியங்களாக முப்பத்தாறு நூல்கள் இருக்கின்றன. இவை தமிழின் தமிழரின் மூல வேர்கள். இவை ஊடாகத்தான் பழந்தமிழரின் அரசியல் நீதி கொடை வீரம் பண்பாடு காதல் சமூகவியல் வணிகம் வானவியல் ஆடை கட்டிடக் கலை மண்ணியல் நாட்டியம் இசை மருத்துவம் அணிகலன் அளவியல் கடல் நாகரீகம் சிற்பக்கலை என பலதுறைகளைப் பார்க்கின்றோம். அவற்றில் எல்லாம் அறிவியலின் பரிணாமமும் கலந்தே இருக்கிறது. பழந்தமிழ் நூல்கள் அடங்கிய இலக்கியங்கள் தமிழ்மொழியின் அடித்தளம். அவற்றில் மிக உன்னதமான கருத்துகள் குவிந்துள்ளன. ஆனால் இன்று ஆங்கில மற்றும் பிறமொழி மாயையில் தமிழர்கள் அவைகளைத் தொடுவதே தேவையில்லாத வேலை என்ற உணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். தாய்மொழி என்பது மரபுவேர் கொண்டது. பழந்தமிழ் இலக்கியங்கள் இல்லாமல் தமிழ் இல்லை. இலக்கியம் மக்களுக்காக மக்கள் மேம்பட எழுதப்பட்டவை. ||( மாத்தளை சோமு வியக்கவைக்கும் தமிழர் அறிவியல்.ப. 111) என்ற இவரின் கூற்று செம்மொழித் தமிழ் இலக்கியங்கள் மீது இவர் கொண்டுள்ள மதிப்பினை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதன் காரணமாக இவரின் படைப்புகளில் செம்மொழித் தமிழ் இலக்கியங்களின் தாக்கங்கள் நிறைய காணப்பட வாய்ப்புண்டு என்பது தெளிவாகின்றது.
மாத்தளை சோமுவின் சிறுகதைகள் – தொகுதி 2 என்ற தொகுப்பு இவரின் முப்பத்து மூன்று கதைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பல கதைகள் இலங்கையில் வாழ் மலையகத் தமிழர்தம் வாழ்க்கை முறையை நினைவு கூர்வன. இன்னும் சில கதைகள் இவரின் ஆஸ்திரேலிய வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியன. ஒரு கதை இலங்கையின் வரலாறு சார்ந்து எழுதப் பெற்றுள்ளது. இக்கதைகள் அனைத்திலும் ஆங்காங்கே செம்மொழி இலக்கியத்தின் தாக்கங்கள் காணப்படுகின்றன. என்றாலும் முழுக்க தாக்கம் பெற்ற ஐந்து கதைகள் இங்கு எடுத்தாளப்பெறுகின்றன.

தமிழ்ப் பண்பாடும் அதை வெளிநாடு வாழ் தமிழர்கள் உயிரெனக் கருதுவதும்
தமிழருக்கென்று தனித்த பண்பாடுகள் உண்டு. அந்தப் பண்பாடுகளை எழுத்து வடிவில் பதிவு செய்வன இலக்கியங்கள். இவ்விலக்கியங்கள் இப்பண்பாட்டைத் தலைமுறைதோறும் கடத்தும் கருவிகளாகவும் விளங்குகின்றன. தமிழ்ப் பண்பாட்டை மறந்த மறுத்த வெளிநாடு வாழ் தமிழர்கள் அதனால் பாதிப்புகள் ஏற்படுகையில் தமிழர் பண்பாட்டின் தன்னிகரற்ற தன்மையை உணர்ந்து கொள்ளுகின்றனர்.
தமிழர்களின் பெயர்கள் நீளமானவை. அவற்றை வெளிநாடுகளில் சுருக்கி அழைப்பது என்பதும் சுருக்கி வைத்துக் கொள்வது என்பதும் தற்போது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது. ~~இந்தத் தாயின் வயது|| என்ற சிறுகதையின் நாயகி காயத்ரி – காயா எனச் சுருக்கப்படுகிறாள். இவளின் பன்னிரண்டு வயது மகள் லாவன்யா. லாவண்யா வயதுக்கு வந்த நிகழ்வுடன் கதை தொடங்குகின்றது. காயாவும் அவளது கணவனும் பணம் சம்பாதிப்பதில் நாட்டம் செலுத்த லாவண்யா என்ற பன்னிரண்டு வயதுடைய குழந்தை வீட்டில் தனிமையில் பல நேரத்தைக் கழிக்கவேண்டியுள்ளது. குறிப்பாக மாலை நேரத்தில் இவளின் தனிமையை ஓர் அயலக இளைஞன் பயன்படுத்திக்கொள்கிறான். இதன் காரணமாக ஒரு நாள் பள்ளியில் இருந்து காயாவுக்கு அழைப்பு வருகிறது. இவ்வழைப்பின் வழியாக லாவன்யா கர்ப்பமாக இருப்பதாக பள்ளி நிர்வாகத்தார் ஐயமுறுகிறார்கள். மருத்துவர்கள் பரிசோதனையில் அது உறுதியும் ஆகிறது. லாவன்யாவிடம் காயா பேசிப்பார்த்தாள். ஆனால் ~~அவள் எனக்கு பேபி பிறந்தால் அதனோடு விளையாடுவேன். எங்க அம்மா சிஸ்டர் பேபி தரவே இல்லை || என்று அறியாத பிள்ளையாய் இது குறித்து மகிழ்ச்சி அடைகிறாள்.
இக்கட்டான நிலையில் காயா சிந்திக்கிறாள். ~~அவள் இப்படி ஆவதற்குத் தானே ஒரு காரணமாகிப் போய்விட்டேனா? எப்போது பார்த்தாலும் பணம் என்ற சிந்தனை அதைத் தேட வேலை ஓவர்டைம் என்று இருந்துவிட்டேன். எல்லாம் இங்கே இருக்கிற திமிரில் எவரோடும் ஒட்டாமல் ஒதுங்கி இருப்பதே உயர்வென்று வீட்டில் தாய்மொழியின் நினைவோ நிழலோ இல்லை. லாவண்யாவுக்குத் தமிழே தெரியாது. தாய்மொழி என்பதை வெறும் மொழி என்றே நினைத்து வி;ட்டேனே! அது நமது அடையாளமாகவும் அதனோடு நமது வேர் ஊடுறுவி இருப்பதையும் மறந்து வி;ட்டேனே|| ( ப. 189) என்ற தற்சிந்தனையில் தமிழ் மொழியின் தேவை அம்மொழி சார்ந்த பண்பாடு போன்றவற்றின் தனித்தன்மையைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தந்திருக்க வேண்டிய அவசியத்தைக் காயா உணர்கிறாள்.

இதற்குப் பின் காயா தன் மகள் லாவண்யாவிற்குத் தனக்கும் தன் கணவனுக்கும் நடந்த திருமண நிகழ்வைக் காணொளியாக் காட்டி அதன் வழியாக திருமணம் குடும்பம் போன்றவற்றின் இன்றியமையாமையை உணர்த்துகிறாள். இவற்றோடு மனநல மருத்துவரின் நல்லுரைகளும் சேர லாவண்யா தன் கர்பத்தைக் கலைத்துவிட முன்வருகிறாள். அப்போது அவள் பேசிய மொழிகள் குறிக்கத்தக்கவை. ~~மம்மி! மம்மி! ஐ டோன்ட் வான்ட் பேபி. ஐ வான்ட் சிஸ்டர்|| (ப. 191) என்ற அவளின் தொடர் ஆங்கில வடிவமானது என்றாலும் அதனுள் புதைந்திருப்பது தமிழ்ப் பண்பாடு. இதனை உணர லாவண்யாவை காயா என்ற தாய் காயப்பட வைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

~~வேர்கள்|| என்ற கதையும் தமிழ் மொழி பண்பாடு ஆகியவற்றின் வேர்களை வெளிநாடு வாழ் தமிழர்கள் உணர உணர வைக்க ஏற்ற கதையாகும். இதில் சுலோச்சனா (சுலோ) என்ற சிறுமி சிட்னி நகரத்தில் இருந்து தன் வேரை அறிந்து கொள்ளத் திருச்சிக்கு வருகிறாள். வந்த சில நாட்கள் வரை ஆஸ்திரேலிய நாட்டுச் சிறுமியாக விளங்கிய சுலோ மெல்ல மெல்ல இந்திய தமிழகப் பெண்ணாக மாறும் கதை இந்தக் கதையாகும்.

சுலோச்சனாவின் தந்தையும் தாயும் சுலோச்சனாவை அழைத்துக் கொண்டு அவரின் தாத்தா வீட்டிற்கு அதவாது திருச்சிக்கு வருகின்றனர். இதற்குக் காரணம் சுலோச்சனாவின் அப்பா ஒரு மொரீசியஸ்காரரை ஆஸ்திரேலியாவில் சந்தித்ததுதான்.
மொரீசியஸ்காரரின் தாத்தா இந்தியாவைச் சார்ந்தவர். தந்தை மொரிஷியஸ் சார்ந்தவர். இவரின் மகள் ஒரு பிரெஞ்சு இளைஞனை மொரீசியஸில் திருமணம் செய்துவிட்டு மூன்றாண்டுகளில் அவனை விட்டுப் பிரிந்துவிடுகிறாள். இதற்குமேல் மொரீஸியசில் வாழ இயலாது என்று ஆஸ்திரேலியாவிற்கு அவர் குடி புகுந்துவிடுகிறார். ~~ நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் மொழி பண்பாடு என்பனவற்றைச் சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்…. நவ். டூ லேட்|| (ப. 156) என்று தன் தவற்றை மொரீசியஸ்காரர் சுலோச்சனாவின் அப்பாவிடம் எடுத்துரைக்கிறார். இதனால் தன் மகளுக்குத் தன் நாட்டின் வேர் தெரியவேண்டும் என்று சுலோச்சனாவின் அப்பா அவளை அவளின் தாத்தா வீட்டிற்கு அழைத்துவருகிறார். ~~மொரீசியஸ்காரரின் அனுபவம் எல்லாம் எனக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே நினைத்தேன். அதன் பின்னர்தான் குடும்பத்தோடு நீண்ட விடுமுறையில் இந்தியா போக முடிவெடுத்தேன்|| (ப. 157) என்ற சுலோச்சனாவின் அப்பாவின் முடிவு பண்பாட்டு வேர்களைத் தேடி தன் மகளுக்காக அவர் தொடங்கிய தாய்நாட்டு; பயணத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.

கதையின் வளர்ச்சியாக சுலோச்சனாவின் தந்தை ஒரு திருமணத்திற்காகக் கொழும்பு சென்று விட்டு தன் பழைய உறவுகளைச் சந்திக்க முயற்சி செய்து சிலரைக் கண்டுச் சில நாள்களில் வருகிறார். இச்சிலநாள்களில் சுலோச்சனா தமிழக் சூழலில் வளரும் குழந்தையாகிவிடுகிறாள்.
~~வீட்டுக் கேட்டைத் திறந்து உள்ளே கால் வைத்தபோது என்னால் நம்பவே முடியவில்லை.சுலோச்சனா எதிர்வீட்டு ஜமுனாவேர்டு தேங்காய்ச் சிரட்டையைச் சட்டியாக வைத்து சமைத்துக் கொண்டிருக்கிறாள். என்னைக் கண்டதும் மண் ஒட்டிய கரங்களோடு சுலோ ஓடிவந்தாள். அப்பா எனக்கு என்ன வாங்கியாந்த? …சுலோவின் தமிழைக் கேட்பதில் மகிழ்ச்சியானேன். அதே சமயம் மகளுக்கு எதுவுமே வாங்கி வரவில்லை என்ற குற்ற உணர்வு என்னை அழுத்தியது. மெல்ல சுலோவைத் தூக்கி அணைத்து முத்தமிட்டேன். பிறகு அவள் தன்னை விடுவித்துக் கொண்டு விளையாடப் போய்விட்டாள்|| (ப. 158) என்ற இந்தச் சொற்றொடர்கள் தாய்நாட்டிற்கு வருவதன் வழியாகக் குழந்தைகளுக்குப் பண்பாட்டின் வேர்களைக் கற்றுத் தந்துவிட இயலும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

சங்க காலத்தில் அகநானூற்றுத் தலைவி ஒருத்தி சிறுசோறு சமைக்கிறாள்.
~~..கானல்
தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும் சிறுசோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தனமாக|| (அகநானூறு. 110- 7-9)
என்ற இப்பாடலில் தலைவி சிறுவீடு கட்டிச் சிறு சோறு சமைக்கிறாள். இதனால் அத்தலைவிக்குக் களைப்பு ஏற்படுகின்றது. சிறு சோறு சமைக்கின்ற இந்நிகழ்வே மாத்தளை சோமுவின் கதையில் தேங்காய்ச் சிரட்டையில் மண்சோறு சமைப்பதாகத் தொடர்கின்றது. மண் விளையாட்டு வண்டல் விளையாட்டாகச் சங்க காலத்தில் விளையாடப்பெற்றுள்ளது.
~~மணல் காண்தொறும் வண்டல்தைஇ|| (நற்றிணை 9 -8) என்று நற்றிணையிலும் ~~கோதை ஆயமொடு வண்டல் தைஇ ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி|| ( அகநானூறு 60- 10-11) என்று அகநானூற்றிலும் பெண்கள் விளையாடும் வண்டல் விளையாட்டு இடம் பெற்றுள்ளது. அகநானூற்றுத்தலைவி மணல் விளையாட்டு விளையாடுவதன் காரணமாக அவளின் உடல் ஒளி குறைந்துவிடும் என்று- தாய் அவளை வீட்டுக்குள் அழைத்தாளாம். இங்கு சுலோ ஜமுனா ஆகியோர் விளையாட்டு ஆயமாகின்றனர். அவர்களும் வண்டல் தடவி விளையாடுகின்றனர். இவ்வாறு தொடர்கின்றது தமிழர் வண்டல் விளையாட்டு மரபு.

முதுமையும் துயரமும்
முதுமைக் காலத்தில் அரவணைப்பு இன்றி முதியவர்கள் அனாதைகளாக விடப்படும் சூழல் இக்காலத்தில் எல்லா நாடுகளிலும் நடைபெறுகின்ற செயலாகிவிட்டது. இளமையின் துடிப்பான தன்மையையும் முதுமையில் கோல் ஊன்றி நடக்கும் தளர்ந்த தன்மையையும் பின்வரும் புறநானூற்றுப் பாடல் எடுத்துக்காட்டுகின்றது.
~~இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறையென லறியா மாயமி லாயமொ
டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா விளமை
அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே (புறநானூறு.243)
இளமையில் குளத்தில் பெண்களோடு கைகோர்த்து விளையாடுதலும் மருத மரத்தின் மீது ஏறி ஆற்றில் குதித்து மூழ்கி ஆழ்மணலை எடுத்து வந்தமையும் இன்று எண்ணிப் பார்க்கத்தக்கதாக உள்ளது. இன்றைக்கு முதுமை வந்துவிடக் கோலூன்றி நடந்து இருமல் இடையில் பேசி வாழ்க்கையைக் கடத்த வேண்டி இருக்கிறது என்று இளமை முதுமை ஆகியவற்றின் இயல்பினை தொடித்தலை விழுத்தண்டினார் பாடுகின்றார். இப்பாடலை எழுதியவர் யாரென்று தெரியாததால் தொடித்தலை விழுத்தண்டினார் என்று பாடல் தொடரே பெயராக தரப் பெற்றுள்ளது.

இத்தகைய இரங்கத் தக்க முதுமையைப் பல இடங்களில் காட்டுகின்றார் மாத்தளை சோமு. அதில் ஒன்று அவருடைய ~~தேனீக்கள்|| என்ற தலைப்பிட்ட கதையில் இடம்பெற்றுள்ளது. ~~கிழவனுடைய தேகம் முழுவதும் வரிக்குதிரைபோல் காய்ந்த முந்திரிக் கோடுகளாகச் சுருங்கிக் கிடந்தது. அவன் மிகவும் தளர்ந்து போய்விட்டான். அது வயதின் காரணமோ வாழ்வின் காரணமோ தெரியவில்லை. கிழவன் கிழிந்த சட்டையும் இடுப்பில் வேட்டியும் கட்டியிருக்கிறான். வேட்டி என்ன நிறமோ? புதிதாக வாங்கும்போது வெள்ளை வெளேரென்று இருந்தது. இப்போதோ காய்ந்த மண்ணின் நிறமாகக் கூடவே வியர்வை நாற்றத்தையும் அள்ளி வீசியது.|| என்ற அம்மாசிக் கிழவனைப் பற்றிய வருணனை தொடித்தலை விழுத்தண்டூன்றிய பாடலின் மறுபதிப்பாக விளங்குகின்றது.

முதுமையின் இரங்கத்தக்கச் சாயலை ~~நமக்கென்றொரு ப+மி|| ~ஒரு கதா பாத்திரத்தின் முடிவுறாத கதை|| ~~அனாதைகள்|| ஆகிய இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதைகள் வாயிலாகவம் அறியமுடிகின்றது.
ஊஞ்சல்
ஊஞ்சல் விளையாட்டை மையமாக வைத்து ஒரு கதையினைப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கி மாத்தளை சோமு படைத்துள்ளார். கதையின் பெயர் ~~ஊஞ்சல் மரம்||.
~~அந்த ஊஞ்சலைக் கட்டி வைத்ததே அவர்கள்தான். முதலில் லயத்தில் ஒரு காம்பராவில் ஒருத்தன் கயிற்றைக் கட்டி சும்மா ஆடினான். அதைப் பார்த்துவிட்டு ஒருவன் அந்த மரத்தில் கயிற்றைக் கட்டி ஆடினான். அப்புறம் எல்லோரும் ஆட ஒருநாள் கயிறு அறுந்து ஒருவன் கீழே விழுந்துவிட்டான்.
அதைப் பார்த்துவிட்டு அந்த லயத்தின் கடைசிக் காம்பராவில் இருப்பவர் – டவுனுக்குப்போய்ச் சங்கிலியும் பலகையும் வாங்கி வந்து மரக்கொம்பில் ஊஞ்சல் அமைத்தான். மரத்தின் கீழே முளைத்திருந்த புற்களை அப்புறப்படுத்தி மணல் கொண்டு வந்து கொட்டி லயத்து வாண்டுகளின் அபிமானத்தைப் பெற்றான்|| (ப. 80)
என்பது மாத்தளை சோமு வரைந்துள்ள ஊஞ்சல் அனுபவம். இதே அனுபவம் சங்க இலக்கியப் பாடலொன்றில் கிடக்கின்றது. ~~ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித் தாழை வீழ்கயிற்று ஊசல் தூங்கி ||(அகநானூறு. 20- 5-6) என்பது அப்பாடலடி.

சங்க காலச் சூழல். மரங்கள் அடர்ந்த ஒரு சோலை. அச்சோலயின் நடுவே ஒரு கொன்றை மரம். அம் மரம் ப+த்துக் குலுங்குகின்றது. அந்த மரத்தின் ப+விதழ்கள் புலிநகம் போன்று காட்சியளிக்கின்றன. அதனால் அம்மரத்திற்குப் புலிநகக் கொன்றைமரம் என்றே பெயர் ஏற்பட்டுவிட்டது. அம்மரத்தில் ஒரு கிளை வாகாக வளைந்து வளர்ந்துள்ளது. அந்தக் கிளையில் தாழை நாரால் செய்யப் பெற்ற மணமிக்க நாரால் ஊஞ்சல் உருவாக்கப்படுகிறது. இந்த ஊஞ்சல்தான் மலையகத்து இலங்கைத் தமிழர் தம் குடியிருப்பு அருகிலும் கட்டப் பெற்று தமிழ் செவ்விலக்கிய மரபு தொடர்கிறது.

கதை மேலும் தொடர்கிறது. பிள்ளைகள் ஊஞ்சலைத் தள்ளுவதும் ஊஞ்சல் ஆடுவதும் எனக் கோலகலமாக இருந்த இந்தவிளையாட்டைத் தேயிலைத் தோட்டத்தையாளும் துரையின் மகன் பார்க்கிறான். அவனுக்கு ஊஞ்சல் மீது ஆசை வருகிறது. துரைவீட்டில் உருட்டுக் கம்பிகளால் ஆன ஊஞ்சல் வந்து சேர்கின்றது. அங்கு துரைமகனுக்கு ஆடுவது சிறப்பாக இல்லை. எனவே அவன் உழைப்பாளர்களின் குழந்தைகள் ஆடும் ஊஞ்சலுக்கு வந்துவிடுகிறான். உழைப்பாளர் குழந்தைகளுடன் துரையின் மகனும் விளையாடுவதா என்று துரைக்கு அது கௌரவப் பிரச்சனையாகிவிடுகிறது. இதைத் தடுக்க என்ன செய்வது என்று எண்ணுகிறார் துரை.
நாள்கள் நகருகின்றன. அவர் ஒருமுறை இந்த ஊஞ்சல் இருப்பிடத்தைக் கடக்கையில் ஒரு குழந்தை அவரின் மகி;ழ்வுந்தில் விழுந்துவிட விபத்து ஏற்பட்டு விடுகிறது இதனையே காரணமாக வைத்து துரை ஊஞ்சல் விளையாட்டைத் தடுத்து நிறுத்த மரத்தை வெட்டிவிடச் சொல்கிறார்.
இந்த மரத்தின் இழப்பு அந்தப் பகுதியையே சோகத்திற்கு உள்ளாக்குகின்றது. மரம் குழந்தைகளை நேசித்தது. மனிதர்கள் நேசிக்கவில்லையே என்று கவலை கொள்கிறார் படைப்பாளர்.

~~அவர்கள் ஊஞ்சல் ஆடும்போது அந்த மரம் அவர்களை ஆசிர்வதிப்பதுபோல் தன்னிடம் ஒட்டிக்கிடக்கிற காய்ந்த இலைகளைக் காகிதப் ப+வாகச் சொரியும்….. குழந்தைகளை அந்த மரம் நேசிக்கிறது. இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயம் அல்லவா! அதனால் அந்த மரம் அவர்களை ஆசீர்வதிக்கிறது. அது இந்த மனிதர்களுக்குத் தெரியவில்லையே|| (ப. 81) என்று படைப்பாளர் மக்களிடத்தில் மனிதநேயம் இல்லாநிலையை மரத்தின் வாயிலாக வெளிப்படுத்திவிடுகின்றார்.

ஒருவாய் நீர்
ஒருவாய் நீருக்காகக் தவிக்கும் குடும்பத்தைப் பற்றிய கதை ‘ஒருவாய் நீர்|| என்பதாகும். இந்தத் தலைப்பே புறநானூற்று பாடல் ஒன்றை உடனே நினைவுக்குக் கொண்டுவந்துவிடுகின்றது. செங்கணான் என்ற சோழ மன்னனுடன் நடந்த போரில் சேரமான் கணைக்கால் இரும்பொறை தோல்வியைத் தழுவுகிறான். கணைக்கால் இரும்பொறை செங்கணானி;ன் சிறையில் கிடக்கிறான். அவனுக்குத் தண்ணீர்த் தாகம் ஏற்படுகின்றது. சிறைக்காவலர்கள் நீரைத் தராது காலம் நீட்டியபோது தன் தன்மானம் குறைவுபடுவதை அம்மன்னன் உணர்கிறான். காலம் நீட்டித்து வந்த அவ்வொருவாய் தண்ணீரை அவன் குடிக்க மறுத்துத் தாகத்துடன் உயிர்விடுகிறான்.
~~….. வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே?||( புறநானூறு.பாடல். 74)
என்ற இந்தப் பாடல் ஒருவாய் நீருக்காகத் தன்மானத்தை இழக்காத தமிழனின் தலைசிறந்த பாட்டு.
இலங்கையின் அரசவையில் சிங்களத்திற்கும் தமிழுக்கும் மொழிப் பெயர்த்துக் கருத்துகளை வெளிப்படுத்தும் அதிகாரி ஒருவர் தன் குடும்பத்துடன் உள்நாட்டுப் போர் காராணமாக ஒரு பதுங்குக் குழியில் பதுங்கி இருக்கிறார். அப்பொழுது தொடர்ந்து: சீறிவந்து ஏவுகணைகள் அவர்கள் இருக்கும் இடத்தைத் தாக்குகின்றன. இந்த இக்கட்டான சூழலில் அவரின் அன்பு மகள் ஒரு வாய் தண்ணீர் கேட்கிறாள். அவரால் பதுங்குக் குழிவிட்டு எழுந்து போக முடியாத நிலை. தொடர்ந்து வெடித்த ஏவுகணைகளுக்கு இடையில் பத்துநிமிட இடைவெளி கிடைக்கிறது. அந்த இடைவெளிக்குள் தண்ணீர் கொண்டுவர அவர் பதுங்குக்குழி விட்டு எழுகிறார். தண்ணீர் எடுக்கிறார். சொம்பில் எடுத்துக் கொண்டு குழி நோக்கிவருகிறார். இதன்பின் நடந்த நிகழ்வுகளை கதையாசிரியார் காட்டுவதை அப்படியே காட்டுவது நல்லது.
~~வேக வேகமாக பதுங்கு குழியை நோக்கி நடந்தார். திடீரென்று வெச்சத்தம் கேட்டது மறுபடியும் எறிகணைகளை வீசத்தொடங்கி விட்டார்கள். வேறு வழியே இல்லை. வெளியே வந்தாகிவட்டது இன்னும் சில அடிகள் எடுத்து வைத்தால். . அதற்குள் ~விர்| ரென்று பறந்து வந்த ஓர் ஏவுகணையின் சிதறல் அவர் இடதுகையை பதம் பார்த்தது. வலது கையில் சொம்பு . அப்போதும் அந்த சொம்பை விடாமல் பதுங்கு குழியில் இறங்கினார். இடது கை விரல்களிலிருந்து ரத்தம் கொட்டுவதைக் கண்ட மனைவி அலறினாள் ~~அய்யோ! உங்கட ஒரு விரல் காணலியே?||

…மகள் அப்போதுதான் இடதுகையைப் பார்த்தாள் . ஒரு விரல் இல்லை. ரத்தம் கீழே கொட்டியது. மௌ;ள சொம்பைத் தூக்கிய மகள் அப்பாவிடம் வந்து அவரின் இடதுகையைத் தண்ணீர் ஊற்றிக் கழுவினாள். . . கந்தசாமியின் கண்களில் இருந்து நீர்த்துளிகள் விழுந்தன. அது கண்ணீர் அல்ல. .. . . || (ப. 270) என்ற கதையாடலில் இரக்கம் படிப்பவர்க்கு மேலிடுகிறது. துயரமான நிகழ்வுகளுக்கு இடையில் மனித உயிர்கள் படும் பாட்டினை இந்தச் சிறுகதை அவலச் சுவை ததும்ப விவரிக்கின்றது.
மாத்தளை சோமு படைத்துள்ள கதைகளில் அவரின் கதையாடல் வளர்ச்சிமுறை மிகத் n;தளிவாகத் n;தரிகின்றது. அவரின் ஆரம்ப நிலைக் கதைகள் வளர் நிலைக் கதைகள் எனப் பல நிலைக் கதைகள் இத்n;தாகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றின் வழியாக அவரின் படைப்பு வளர்ச்சி அறியத்தக்கதாக உள்ளது.
மலையக மக்களை முன்வைத்து அவர்களுக்கான இலக்கியத்தைப் படைத்து வரும் அவரின் முயற்சி அவரின் படைப்புகள் சான்றுகளாக அமைகின்றன. இலங்கை சார்ந்த மலையக இலக்கியம் என்ற பிரிவிற்கு இவர் தனிச் சான்றாகின்றார்.
புலம் பெயர் இலக்கியம் என்ற நிலையில் ஆஸ்திரேலிய நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்தம் நிலையை இவரின் கதைகள் எடுத்துரைக்கின்றன. சிட்னி நகர வாழ்வைப் படம்பிடித்துக்காட்டும் அவரின் படைப்புத்திறன் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தில் குறிக்கத்தக்க இடம் வகிக்கின்றது.

குறிக்கத்தக்க ஐந்து கதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றில் தொனிக்கும் செம்மொழிச் சாயல்களை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது என்றாலும் விடுதலாகியுள்ள கதைகள் அனைத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமி;ழ்ச் செவ்விலக்கிய மரபு உறைந்துள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை. இலங்கைத் தமிழர்கள் மலேயத் தமிழர்கள் சிங்கைத் தமிழர்கள் மொரிசீயஸ் தமிழர்கள் இன்று எல்லை தாண்டினாலும் அனைத்துத் தமிழர்களின் தாய்மண் தாய் இலக்கியம் செம்மொழி இலக்கியங்கள் என்பது கருதத்தக்கது. செம்மொழி இலக்கியங்களின் தாக்கம் திரைகடலோடிய தமிழர்கள் அனைவரிடத்திலும் ஏதாவது ஒருவகையில் தாக்கம் செலுத்துகின்றது என்பதற்கு மாத்தளை சோமுவின் கதைகள் நல்ல சான்றுகள்.

பயன் கொண்ட நூல்கள்
மாத்தளை சோமு மாத்தளை சோமுவின் சிறுகதைகள் (தொகுதி.2)
இளவழகன் பதிப்பகம். சேன்னை 2003
சுப்பிரமணியம்.ச.வே. சங்கஇலக்கியம் எட்டுத்தொகை தொகுதி 123)
மணிவாசகர் பதிப்பகம் சென்னை 2010
-------------------------------------------------------------------

அகஒட்டு( நாவல்)விமர்சனம்

முனைவர் மு. பழனியப்பன்


அகஒட்டு, இலக்குமி குமாரன் ஞானதிரவியம். அன்னம், தஞ்சாவூர், விலை. ரு. 140.
கவிஞர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். கவிதைகளை ஒருகட்டத்தில் கடந்து கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என்று அவரின் படைப்பு வகைமைகள் பரவி வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. படைப்புகளின் முலம், முதல் கவிதை அதன் பின்னணியிலேயே மற்ற வகைமைகள் வளர்கின்றன என்ற  பொது வரம்பிற்கு அவரும் ஒத்துப்போகிறார். அவரது அக ஒட்டு என்ற நாவலை ஒரே முச்சில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இந்நாவலில் அத்திவெட்டி என்ற ஊரில் வாழ்ந்த ரெங்கசாமி ஆர்சுத்தியார் மகன் நடேச ஆர்சுத்தியார்   மகன் செல்வம் ஆர்சுத்தியார் எம்.ஏ.(தமிழ் ) என்ற கதா பாத்திரத்திற்குள் ஒளிந்து கொண்டு தன்னை, தன் சுற்றத்தை நண்பர்களையும் ஒளிந்து கொள்ள இடம் தந்து கண்ணாமுச்சி ஆட்டத்தினை ஆடியுள்ளார் ஞானதிரவியம்.    இவரது கைவண்ணத்தில் தஞ்சை மண்ணின் மனிதர்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கைப்பாடுகள் முதலியன இந்நாவலில் இலக்கியவடிவம் பெற்றுள்ளன.
செல்வம் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்கள் யாரும் இல்லை. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிற கமலம் என்ற பெண்ணின் வீட்டில் அவளின் குடும்பத்தார்களான தங்கை சுந்தரி, தம்பி முரளி  தந்தை சின்னசாமி,  தாய் சின்னமணி போன்ற பலரும் அவர்களது உறவினர்களும் உள்ளனர். இவர்களை விலக்கவும் முடியாமல் அணைக்கவும் முடியாமல், அவர்களின் நடவடிக்கைகளைத் தட்டிக் காட்டவும் முடியாமல், சரிசெய்யவும் முடியாமல் செல்வம் தவிக்கும் தவிப்புகளே இந்நாவலின் பெரும்பக்கங்கள் ஆகும்.
செல்வம் என்ற கிராமத்து வாசனை மிக்க இளைஞன் எந்த காலத்திலும் தன் நிலத்தை, தன் வீட்டை, தன் மாடுகளை விட்டு விட்டு வேறு ஊருக்குப் போய்விடக்கூடாது என்ற திண்ணமிக்க எண்ணத்தில் விழுந்த மண்ணாக அவரின் குடும்பச் சூழல் மாறுவதை நாவல் நன்றாகச் சித்திரித்துள்ளது.
“செல்வத்திற்கு மனசு வெறிச்சென்று கிடந்தது. ஏதோ தவறு நிகழப் போகிற உணர்வு வந்து படுத்தியது.   இந்த ஆடு, மாடுகள், தோப்பு, தொரவுகள், அப்பாவின் நினைவில் இந்தப் பெரிய ஓட்டுவீடு, மண் ஒழுங்கைகள், பாலியத்தில் ஏறியாடிய மா. பலா, நாவல், வேம்பு மரங்கள், அறுகு மண்டிக்கிடக்கும் வர ப்புகள்.., நீந்திக் குளித்தாடிய குளங்கள், அரசியல் பேசிக்கிடக்கும் குளக்கரைப் படிக்கட்டுகள், நிலாவில் நடப்பதற்காகவே பௌர்ணமிக்கால சினிமா,  நல்ல தண்ணீர், நல்ல காற்று  என்று அத்தனையையும் விட்டுவிட்டு ஒரு குளவிக் கூட்டிற்குப் போக வேண்டுமா? போகாமல் இருந்துவிட்டால் என்ன என்று ஒரு நாளைக்குப் பத்திருபது முறை யோசனை வந்தது.”
என்ற   நாவலின் பகுதியில் செல்வம் என்ற கிராமத்து இளைஞனின் புலம் பெயர் மனோபாவம் தெரியவருகிறது. ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக செல்வம் இருந்த கிராமத்து வீடு பூட்டுகின்ற அவசியம் இல்லாமலேயே, பூட்டப்படாமலே கிடந்திருக்கிறது. இதன் காரணமாக அதற்கு நாதாங்கி என்ற ஒன்றே தேவைப்படாமல் இருந்தது. தற்போது தஞ்சாவுர் என்ற நகரத்திற்குச் செல்ல வேண்டிய காட்டாயம் வந்தபோது தன் வீட்டினைப் புட்டுவதற்காக நாதாங்கிப் போடப்படும் போது செல்வம் படும் வேதனை சொல்லில் அடங்காததாக உள்ளது.
படிக்காத புத்தகங்கள், மீளவும் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்று முட்டை முட்டைகளாக குவித்து வைத்திருந்தவற்றைக் குறைக்கச் சொல்லிக் கமலம் கேட்க, அவற்றைக் காப்பாற்றக் கெஞ்சிய செல்வத்தின் செய்கையும் நாவலைப் படிக்கின்றபோது இலக்கிய ஏக்கத்தை ஏற்படுத்துகின்றது.
இவ்வளவு மாற்றங்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று செல்வத்திற்குக் கிடைத்திருக்கும் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர் பணி. சம்பளம் அதிகமில்லாத ஆனால்  பணிநேரம்,பளு கூடுதலாக உள்ள வாய்க்கும் வயிற்றுக்கும் போதாத அந்தப் பணியை நம்பி தஞ்சைக்குக் குடியேற வேண்டும். அடுத்தது மாமனார் வீட்டில் கருவேப்பிலைக் கொழுந்தாக வளரந்து வந்த முரளி என்ற தன் மச்சானுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்த சூழல். இந்தச் சூழலில் மச்சானை வைத்து ஐந்தாண்டுகள் காப்பற்ற வேண்டிய இக்கட்டான சூழலில் செல்வம் அலைப்புறுகிறார்.
தனக்கு வேண்டியதை, தன் குடும்பத்தை நிர்வகிப்பதைப் புறம் தள்ளி விட்டு தம்பிக்காக தன்னுயிரைத் தரத் தயராகும் கமலம், இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு கோபமே வராமல் கொள்கைப் பிடிப்புடன் விமர்சனம்கூட செய்யாமல் காலத்தை நடத்தும் செல்வம் என்று நகர்கிறது நாவல்.
ஒருவழியாய் மெல்ல நாள் கடந்து படிப்பு முடித்து மருத்துவப் பணியைத் தொடங்க முரளி மெல்ல செல்வம் வீட்டில் இருந்து நகர்கிறான். அவன் நகர்ந்ததைச் செல்வம் வெடிவெடித்துக் கொண்டாடவில்லையே தவிர அத்தனைப் பூரிப்பு அவருடைய மனதில். ஏனென்னறால் ஐந்தாண்டுகளாக அடைபட்ட அறைக்குள், உணர்வற்ற, சக மனிதர்களின் உணர்வை புரிந்து கொள்ளாத முரளி என்ற சடத்திடம்  இருச்துச் செல்வத்திற்கு விடுதலை கிடைத்திருக்கிறது.
முரளி செல்வம் குடியிருந்த வீட்டின் ஒரு அறையை விட்டுப்போனதை, அதன் தொடர்வாக நடக்கும் நிகழ்வுகளைப் பின்வரும் நாவல் பகுதிகள் உணர்த்துகின்றன.
“முரளி தங்கியிருந்த  ருமைக் கூட்டிக் கொண்டிருந்தாள் கமலம். அந்த ருமில் நுழைய முடியாத அளவிற்குப் புத்தகப் புழுங்கல் நாற்றமும், கற்றாழை நாற்றமும் அடித்துச் செல்வத்திற்கு வயிற்றைக் குமட்டியது.` என்னா மனுசண்டி இவன்…. ‘ என எரிச்சலடைந்தான்.  `ஆமாங்கறேன்’ என்று ஆமோதித்தாள் ஒரு நீண்ட தும்மல் போட்டுக் கொண்டே ` யாந்.. அவம் போய்த்தான்னு தைரியமாக சொல்றியாக்குந்….’ என்று சிரித்தான் செல்வம். முக்கில் கர்சிப்பை வைத்துக் கொண்டு அந்த அறையைச் சுற்றி வந்து “யாண்டி.. .இந்த  ருமு என்னா ஹைதர் அலி காலத்து ருமு மாரி இருக்கே… இதக் கூட்டிப் பெருக்கறதே இல்லையா… என்று கேட்டான் செல்வம்.
…`சரி.. தொலஞ்சது சனி… இனுமே இது வந்து நம்ம தூங்கிக்கலாம்… என்று ஓரக்கண்ணால் கமலத்தைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான் செல்வம்”  என்ற குறிப்பில் இருந்து கமலமும் செல்வமும் வாழ்ந்த அர்த்தமற்ற வாழ்க்கை தெளிவாகிறது.
இதன்பின் முரளி என்ற பாத்திரத்தின் வாழ்க்கை நீளுகையாகக் கதை தொடர்கிறது. முரளிக்குத் தங்கம் என்ற பெண்ணைத் திருமணம் செய்து  வைக்கிறார்கள் பெரியவர்கள். இப்பெண் பல லட்சம் பணத்தடனும், கார், பங்களாக்களுடனும் முரளியின் கரம்பிடிக்கிறாள். ஆனால் முரளி இதற்கு முன்பாகவே தன் மாமா உறவில் ஒட்டி வளர்ந்த கண்மணி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுகிறான்.
இரண்டு பெண்களையும் வேறு வேறு ஊர்களில் வைத்துத் தன் வாழ்வை நடத்தலாம் என்ற முரளியின் திட்டம் ஒருகாலத்தில் வெட்டவெளிச்சமாகிவிடுகிறது. இதன் காரணமாக கண்மணிக்கு ருபாய் நான்கு லட்சம் தந்து வெட்டிவிட தங்கத்துடனான முரளியின் உறவு நிரந்தமாக்கப்படுவதாக நாவல் முடிகிறது.
உறவுகளின் அழுத்தங்கள் காரணமாக உறவுகள் அமையப் பெறாத ஒருவர் ஒட்டிவந்த உறவுகள் வெட்டிக்கொண்டு போய்விடக்கூடாதே என்று படும் அவல வேதனைகளின் காட்சித் தொடர்வாக இந்த நாவல் படைக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொருவர் வாழ்வில் ஒவ்வொரு சிக்கல் என்ற இயல்பான வாழ்வனுபவம் இந்நாவலில் வெளிப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்நாவலின் பலம் என்பது செல்வத்தின் நண்பர்களால் அவர் பெறும் எழுத்தாளர், கவிஞர், பேராசிரியர் என்ற மதிப்பும், அவர்கள் அவ்வப்போது உதவும் பணக் கொடையும்தான் என்றால் அது மிகையாகாது.
அகவொட்டு என்ற  நாவலின் பெயர் தமிழ்த்தளத்தில் நீந்துவதாக இந்த நாவலைக் காட்ட முற்பட்டாலும் ஆங்கிலச் சொற்களின் தமிழ் ஒலிபெயர்ப்புகள் பல இடங்களில் இடம் பெறச் செய்யப் பெற்றிருப்பது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. தஞ்சாவுரின் சில சொலவடைகள், வழக்குச் சொற்கள் முதலானவற்றைப் புரிந்து கொள்ள சில பக்கங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக `மறி’ என்ற சொல்லை இந்த நாவல் பல இடங்களில் பெற்றிருக்கிறது. அது தஞ்சாவூர் வந்தபின்னும் தன் ஆளுகையை விட்டுவிடவில்லை. இதனை பிற மாவட்ட வாசகர்கள் புரிந்து கொள்ள  முயலவேண்டியுள்ளது.
நாவலைப் படிக்கத் தொடங்கும்போது செல்வம் என்ற மனிதர் நம்முன் சைக்கிளை ஓட்டியபடி அத்திவெட்டியில் அறிமுகமாகிறார்.  தஞ்சாவூரின் ஜனநெரிசல் மிக்க சந்துகளைக் கடந்து அத்தி வெட்டியை எண்ணியபடி இப்போது அவர் டி.வி. எஸ் சூப்பர் எக்ஸெலில் சென்று கொண்டிருக்கிறார். அவரை நாம் நிறுத்தினாலும், நீங்கள் நிறுத்தினாலும் உங்கள் கதையைக் கேட்க, சோகத்தைக் கேட்க அவர் தயாராக இருக்கிறார். முடிந்தால் உங்கள் பக்கத்தில் நின்று பஞ்சாயத்தும் செய்யக் கூடும்.
இந்நாவலை வெளியிட்ட அன்னத்திற்குப் பாராட்டுகள். தொடர்ந்து மீராவின் கனவுகளை மெய்ப்படுத்திப் புதிய படைப்பாளர்களைத் தரமோடு தமிழ் மண்ணுக்குத் தந்துள்ள அன்னம் பணி தொடரட்டும்.  தொடரவேண்டும்.
———- முன் அனுப்பப்பட்டத் தகவல் ———-
அனுப்புநர்: palaniappan m <muppalam2006@gmail.com>
தேதி: 12 செப்டெம்ப்ர், 2011 8:27 am
தலைப்பு: திண்ணைக்காக அகஒட்டு என்ற நூலின் விமர்சனம்
பெறுநர்: editor@thinnai.com
அகஒட்டு( நாவல்)
இலக்குமி குமாரன் ஞானதிரவியம். அன்னம், தஞ்சாவூர், விலை. ரு. 140.
கவிதையையே தன் வாழ்க்கையாக வரித்துக் கொண்டவர் கவிஞர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். கவிதைகளை ஒருகட்டத்தில் கடந்து கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என்று அவரின் படைப்பு வகைமைகள் பரவி வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. படைப்புகளின் முலம், முதல் கவிதை அதன் பின்னணியிலேயே மற்ற வகைமைகள் வளர்கின்றன என்ற  பொது வரம்பிற்கு அவரும் ஒத்துப்போகிறார். அவரது அக ஒட்டு என்ற நாவலை ஒரே முச்சில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இந்நாவலில் அத்திவெட்டி என்ற ஊரில் வாழ்ந்த ரெங்கசாமி ஆர்சுத்தியார் மகன் நடேச ஆர்சுத்தியார்   மகன் செல்வம் ஆர்சுத்தியார் எம்.ஏ.(தமிழ் ) என்ற கதா பாத்திரத்திற்குள் ஒளிந்து கொண்டு தன்னை, தன் சுற்றத்தை நண்பர்களையும் ஒளிந்து கொள்ள இடம் தந்து கண்ணாமுச்சி ஆட்டத்தினை ஆடியுள்ளார் ஞானதிரவியம்.    இவரது கைவண்ணத்தில் தஞ்சை மண்ணின் மனிதர்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கைப்பாடுகள் முதலியன இந்நாவலில் இலக்கியவடிவம் பெற்றுள்ளன.
செல்வம் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்கள் யாரும் இல்லை. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிற கமலம் என்ற பெண்ணின் வீட்டில் அவளின் குடும்பத்தார்களான தங்கை சுந்தரி, தம்பி முரளி  தந்தை சின்னசாமி,  தாய் சின்னமணி போன்ற பலரும் அவர்களது உறவினர்களும் உள்ளனர். இவர்களை விலக்கவும் முடியாமல் அணைக்கவும் முடியாமல், அவர்களின் நடவடிக்கைகளைத் தட்டிக் காட்டவும் முடியாமல், சரிசெய்யவும் முடியாமல் செல்வம் தவிக்கும் தவிப்புகளே இந்நாவலின் பெரும்பக்கங்கள் ஆகும்.
செல்வம் என்ற கிராமத்து வாசனை மிக்க இளைஞன் எந்த காலத்திலும் தன் நிலத்தை, தன் வீட்டை, தன் மாடுகளை விட்டு விட்டு வேறு ஊருக்குப் போய்விடக்கூடாது என்ற திண்ணமிக்க எண்ணத்தில் விழுந்த மண்ணாக அவரின் குடும்பச் சூழல் மாறுவதை நாவல் நன்றாகச் சித்திரித்துள்ளது.
“செல்வத்திற்கு மனசு வெறிச்சென்று கிடந்தது. ஏதோ தவறு நிகழப் போகிற உணர்வு வந்து படுத்தியது.   இந்த ஆடு, மாடுகள், தோப்பு, தொரவுகள், அப்பாவின் நினைவில் இந்தப் பெரிய ஓட்டுவீடு, மண் ஒழுங்கைகள், பாலியத்தில் ஏறியாடிய மா. பலா, நாவல், வேம்பு மரங்கள், அறுகு மண்டிக்கிடக்கும் வர ப்புகள்.., நீந்திக் குளித்தாடிய குளங்கள், அரசியல் பேசிக்கிடக்கும் குளக்கரைப் படிக்கட்டுகள், நிலாவில் நடப்பதற்காகவே பௌர்ணமிக்கால சினிமா,  நல்ல தண்ணீர், நல்ல காற்று  என்று அத்தனையையும் விட்டுவிட்டு ஒரு குளவிக் கூட்டிற்குப் போக வேண்டுமா? போகாமல் இருந்துவிட்டால் என்ன என்று ஒரு நாளைக்குப் பத்திருபது முறை யோசனை வந்தது.”
என்ற   நாவலின் பகுதியில் செல்வம் என்ற கிராமத்து இளைஞனின் புலம் பெயர் மனோபாவம் தெரியவருகிறது. ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக செல்வம் இருந்த கிராமத்து வீடு பூட்டுகின்ற அவசியம் இல்லாமலேயே, பூட்டப்படாமலே கிடந்திருக்கிறது. இதன் காரணமாக அதற்கு நாதாங்கி என்ற ஒன்றே தேவைப்படாமல் இருந்தது. தற்போது தஞ்சாவுர் என்ற நகரத்திற்குச் செல்ல வேண்டிய காட்டாயம் வந்தபோது தன் வீட்டினைப் புட்டுவதற்காக நாதாங்கிப் போடப்படும் போது செல்வம் படும் வேதனை சொல்லில் அடங்காததாக உள்ளது.
படிக்காத புத்தகங்கள், மீளவும் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்று முட்டை முட்டைகளாக குவித்து வைத்திருந்தவற்றைக் குறைக்கச் சொல்லிக் கமலம் கேட்க, அவற்றைக் காப்பாற்றக் கெஞ்சிய செல்வத்தின் செய்கையும் நாவலைப் படிக்கின்றபோது இலக்கிய ஏக்கத்தை ஏற்படுத்துகின்றது.
இவ்வளவு மாற்றங்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று செல்வத்திற்குக் கிடைத்திருக்கும் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர் பணி. சம்பளம் அதிகமில்லாத ஆனால்  பணிநேரம்,பளு கூடுதலாக உள்ள வாய்க்கும் வயிற்றுக்கும் போதாத அந்தப் பணியை நம்பி தஞ்சைக்குக் குடியேற வேண்டும். அடுத்தது மாமனார் வீட்டில் கருவேப்பிலைக் கொழுந்தாக வளரந்து வந்த முரளி என்ற தன் மச்சானுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்த சூழல். இந்தச் சூழலில் மச்சானை வைத்து ஐந்தாண்டுகள் காப்பற்ற வேண்டிய இக்கட்டான சூழலில் செல்வம் அலைப்புறுகிறார்.
தனக்கு வேண்டியதை, தன் குடும்பத்தை நிர்வகிப்பதைப் புறம் தள்ளி விட்டு தம்பிக்காக தன்னுயிரைத் தரத் தயராகும் கமலம், இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு கோபமே வராமல் கொள்கைப் பிடிப்புடன் விமர்சனம்கூட செய்யாமல் காலத்தை நடத்தும் செல்வம் என்று நகர்கிறது நாவல்.
ஒருவழியாய் மெல்ல நாள் கடந்து படிப்பு முடித்து மருத்துவப் பணியைத் தொடங்க முரளி மெல்ல செல்வம் வீட்டில் இருந்து நகர்கிறான். அவன் நகர்ந்ததைச் செல்வம் வெடிவெடித்துக் கொண்டாடவில்லையே தவிர அத்தனைப் பூரிப்பு அவருடைய மனதில். ஏனென்னறால் ஐந்தாண்டுகளாக அடைபட்ட அறைக்குள், உணர்வற்ற, சக மனிதர்களின் உணர்வை புரிந்து கொள்ளாத முரளி என்ற சடத்திடம்  இருச்துச் செல்வத்திற்கு விடுதலை கிடைத்திருக்கிறது.
முரளி செல்வம் குடியிருந்த வீட்டின் ஒரு அறையை விட்டுப்போனதை, அதன் தொடர்வாக நடக்கும் நிகழ்வுகளைப் பின்வரும் நாவல் பகுதிகள் உணர்த்துகின்றன.
“முரளி தங்கியிருந்த  ருமைக் கூட்டிக் கொண்டிருந்தாள் கமலம். அந்த ருமில் நுழைய முடியாத அளவிற்குப் புத்தகப் புழுங்கல் நாற்றமும், கற்றாழை நாற்றமும் அடித்துச் செல்வத்திற்கு வயிற்றைக் குமட்டியது.` என்னா மனுசண்டி இவன்…. ‘ என எரிச்சலடைந்தான்.  `ஆமாங்கறேன்’ என்று ஆமோதித்தாள் ஒரு நீண்ட தும்மல் போட்டுக் கொண்டே ` யாந்.. அவம் போய்த்தான்னு தைரியமாக சொல்றியாக்குந்….’ என்று சிரித்தான் செல்வம். முக்கில் கர்சிப்பை வைத்துக் கொண்டு அந்த அறையைச் சுற்றி வந்து “யாண்டி.. .இந்த  ருமு என்னா ஹைதர் அலி காலத்து ருமு மாரி இருக்கே… இதக் கூட்டிப் பெருக்கறதே இல்லையா… என்று கேட்டான் செல்வம்.
…`சரி.. தொலஞ்சது சனி… இனுமே இது வந்து நம்ம தூங்கிக்கலாம்… என்று ஓரக்கண்ணால் கமலத்தைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான் செல்வம்”  என்ற குறிப்பில் இருந்து கமலமும் செல்வமும் வாழ்ந்த அர்த்தமற்ற வாழ்க்கை தெளிவாகிறது.
இதன்பின் முரளி என்ற பாத்திரத்தின் வாழ்க்கை நீளுகையாகக் கதை தொடர்கிறது. முரளிக்குத் தங்கம் என்ற பெண்ணைத் திருமணம் செய்து  வைக்கிறார்கள் பெரியவர்கள். இப்பெண் பல லட்சம் பணத்தடனும், கார், பங்களாக்களுடனும் முரளியின் கரம்பிடிக்கிறாள். ஆனால் முரளி இதற்கு முன்பாகவே தன் மாமா உறவில் ஒட்டி வளர்ந்த கண்மணி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுகிறான்.
இரண்டு பெண்களையும் வேறு வேறு ஊர்களில் வைத்துத் தன் வாழ்வை நடத்தலாம் என்ற முரளியின் திட்டம் ஒருகாலத்தில் வெட்டவெளிச்சமாகிவிடுகிறது. இதன் காரணமாக கண்மணிக்கு ருபாய் நான்கு லட்சம் தந்து வெட்டிவிட தங்கத்துடனான முரளியின் உறவு நிரந்தமாக்கப்படுவதாக நாவல் முடிகிறது.
உறவுகளின் அழுத்தங்கள் காரணமாக உறவுகள் அமையப் பெறாத ஒருவர் ஒட்டிவந்த உறவுகள் வெட்டிக்கொண்டு போய்விடக்கூடாதே என்று படும் அவல வேதனைகளின் காட்சித் தொடர்வாக இந்த நாவல் படைக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொருவர் வாழ்வில் ஒவ்வொரு சிக்கல் என்ற இயல்பான வாழ்வனுபவம் இந்நாவலில் வெளிப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்நாவலின் பலம் என்பது செல்வத்தின் நண்பர்களால் அவர் பெறும் எழுத்தாளர், கவிஞர், பேராசிரியர் என்ற மதிப்பும், அவர்கள் அவ்வப்போது உதவும் பணக் கொடையும்தான் என்றால் அது மிகையாகாது.
அகவொட்டு என்ற  நாவலின் பெயர் தமிழ்த்தளத்தில் நீந்துவதாக இந்த நாவலைக் காட்ட முற்பட்டாலும் ஆங்கிலச் சொற்களின் தமிழ் ஒலிபெயர்ப்புகள் பல இடங்களில் இடம் பெறச் செய்யப் பெற்றிருப்பது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. தஞ்சாவுரின் சில சொலவடைகள், வழக்குச் சொற்கள் முதலானவற்றைப் புரிந்து கொள்ள சில பக்கங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக `மறி’ என்ற சொல்லை இந்த நாவல் பல இடங்களில் பெற்றிருக்கிறது. அது தஞ்சாவூர் வந்தபின்னும் தன் ஆளுகையை விட்டுவிடவில்லை. இதனை பிற மாவட்ட வாசகர்கள் புரிந்து கொள்ள  முயலவேண்டியுள்ளது.
நாவலைப் படிக்கத் தொடங்கும்போது செல்வம் என்ற மனிதர் நம்முன் சைக்கிளை ஓட்டியபடி அத்திவெட்டியில் அறிமுகமாகிறார்.  தஞ்சாவூரின் ஜனநெரிசல் மிக்க சந்துகளைக் கடந்து அத்தி வெட்டியை எண்ணியபடி இப்போது அவர் டி.வி. எஸ் சூப்பர் எக்ஸெலில் சென்று கொண்டிருக்கிறார். அவரை நாம் நிறுத்தினாலும், நீங்கள் நிறுத்தினாலும் உங்கள் கதையைக் கேட்க, சோகத்தைக் கேட்க அவர் தயாராக இருக்கிறார். முடிந்தால் உங்கள் பக்கத்தில் நின்று பஞ்சாயத்தும் செய்யக் கூடும்.
இந்நாவலை வெளியிட்ட அன்னத்திற்குப் பாராட்டுகள். தொடர்ந்து மீராவின் கனவுகளை மெய்ப்படுத்திப் புதிய படைப்பாளர்களைத் தரமோடு தமிழ் மண்ணுக்குத் தந்துள்ள அன்னம் பணி தொடரட்டும்.  தொடரவேண்டும்.

Comments