கம்ப ராமாயணக் கட்டுரைகள்

பஞ்சவடியும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும்

முனைவர் மு. பழனியப்பன்

இணைப் பேராசிரியர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருவாடானை
            இயற்கையும் மனிதனும் இரண்டறக் கலந்து வாழ்ந்த வாழ்க்கைக் காலம் சிறந்த வாழ்க்கைக் காலம் ஆகும். இயற்கையோடு இணைந்து, தானும் இயற்கையை வளர்த்து ஒரு காலத்தில் மனிதன் வாழ்ந்து வந்தான். இக்காலத்தில் இயற்கையை எதிர்த்து இயற்கையைச் சுரண்டி அதன் வளத்தைக் கெடுத்து விடும் சூழல்களே உள்ளன. பழைய இலக்கியங்களில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற விழிப்புணர்வு இல்லாத நிலையிலும் சுற்றுச் சூழலைப் பாடுவது என்பது ஒரு மரபாக இருந்துள்ளது. காடு, மலை வருணனை, இரு சுடர் தோற்றம் என்ற படைப்பு உத்திகள் காப்பியத்திற்கான உத்திகளாகக் கொள்ளப்பெற்றிருந்தன. இதன் காரணமாக இயற்கையை அதன் இனிமையைப் புலவர்கள் பாடினர்.
            கம்பராமாயணத்தில் இயற்கையைப் பாடும் வாய்ப்பு கம்பருக்குப் பல இடங்களில் கிடைக்கின்றது. இராமன் காடேகும் நிலையிலும், சீதையைப் பிரிந்து தேடும் நிலையிலும், இராவணனுடன் போர் புரியச் சென்ற நிலையிலும் பல இடங்களில் இயற்கையைப் போற்றியே கம்பர் தம் கம்பராமாயணக் காப்பியத்தை நடத்திச் சென்றுள்ளார்.
பஞ்சவடி
            இராமனும் சீதையும் பதினான்கு ஆண்டுகள் தாங்கரும் தவம் மேற்கொண்டு, புண்ணிய துறைகள் ஆடி வந்திடக் கூறிய அன்னை கைகேயின் வாக்கை ஏற்றுக் காடேகுகின்றனர். அவர்களுடன் இளையவனான இலக்குவனும் வருகிறான். இவர்கள் காட்டின் எல்லையில் முனிவர்களைக் கண்டு, குகனின் தோழமையைப் பெற்று வரும் நிலையில் பஞ்சவடியில் தங்குகின்றனர். அது தங்குவதற்கான சிறந்த இடம் என்று இராமனுக்குச் சுட்டப்பெறுகிறது.
            தண்டகாரணியத்தில் பத்து ஆண்டுகள் கழித்த இராமன், சீதை, இலக்குவன் அகத்தியரைச் சந்தித்து அவரின்வழி பஞ்சவடி என்னும் குன்றினைப் பற்றி  அறிகின்றனர். அதுவே தங்க இனிய இடம் என்ற நிலையில் அதனைப் பற்றிய செய்திகளை அகத்தியர் இயற்கை நலம் கொஞ்ச வழங்குகிறார்.
‘ஓங்கும் மரன் ஓங்கிஇ மலை ஓங்கிஇ மணல் ஓங்கிஇ
பூங் குலை குலாவு குளிர் சோலை புடை விம்மிஇ
தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓர் குன்றின்
பாங்கர் உளதால்இ உறையுள் பஞ்சவடி – மஞ்ச!
என்ற நிலையில் பஞ்சவடி இராமனுக்கும் அவன் உடன் வந்தோருக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது. மரங்கள் ஓங்கி நிற்கும் இடமாகவும், உயர்ந்த மலையை உடைய இடமாகவும், விளையாடுவதற்கு ஏற்ற நல்ல மணற்பாங்கான இடமாகவும், பூக்கள் பூக்கின்ற குளிர் சோலைகளை உடைய இடமாகவும், குன்றின் மேல் உள்ள இடம் பஞ்சவடி என்று அறிமுகம் இவ்விடம் அறிமுகம் செய்யப்படுகிறது.
            மேலும் அவ்விடத்தில் இயற்கை பல காய்களையும் கனிகளையும் தந்து நிற்பதால் தவ உறைவிடத்திற்குச் சிறப்பான இடம் என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.
            வாழை இளம் கனிகள் தொங்கும் வாழைமரங்களும், செந்நெல் விளையும் வயல்களும், பூக்களில் தேன் வழியும் நிலைப்பாடும், தெய்வத்தன்மை உள்ள பொன்னி நதி போன்று கோதாவரி நதியும் உடைய இடம் பஞ்சவடியாகும். இவைமட்டுமில்லாமல் சீதையுடன் விளையாட அன்னங்கள் பயிலும் இடமாகவும் அது விளங்குகின்றது என்று கம்பர் பாடுகின்றார்.
‘கன்னி இள வாழை கனி ஈவ; கதிர் வாலின்
செந்நெல் உள; தேன் ஒழுகு போதும் உள; தெய்வப்
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள; போதாஇ
அன்னம் உளஇ பொன் இவளடு அன்பின் விளையாட.
இத்தகைய இடத்தில் நீங்கள் மகிழ்வுடன் தங்கலாம் என்று அகத்தியர் இராம குழுவினருக்கு அடையாளம் காட்டுகின்றார். இவ்விருபாடல்கள் வழியாக தங்குவதற்கு இனிமையான இடம் பஞ்சவடி என்பதும் அங்கு உணவிற்குத் தட்டுப்பாடு வராத நிலையில் தேனும். செந்நெல்லும், நீரும், வாடைக்கனிகளும் நிறைந்திருக்கும் என்பதும் கம்பரால் காட்டப்படும் வளங்கள் ஆகும்.
            இவ்வாறு அகத்தியர் சொல்லால் வளம் பெற்ற இடமாக பஞ்சவடி விளங்குகின்றது. இவ்விடம் பற்றி இராமன் குறிப்பிடும்போது அவனின் சொற்களில் சூழல் என்ற சொல் இடம் பெறுவது இக்காலத்தின் சுற்றுச் சூழல் நிலைப்பாட்டிற்குப் பெரிதும் பொருந்துவதாக உள்ளது.
இறைவ! எண்ணிஇ அகத்தியன் ஈந்துளது
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரைத்
துறையுள் உண்டு ஒரு சூழல்; அச் சூழல் புக்கு
உறைதும்’ என்றனன் -உள்ளத்து உறைகுவான்.
                                               (சடாயு காண் படலம், பாடல்எண் 39)
என்ற நிலையில் இராமன் தான் தங்க உள்ள சூழல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறான். சூழலியல் நிலையில் இப்பாடல் சிறப்பிற்குரிய பாடலாகும்.
கோதாவரி ஆறு
            பஞ்சவடி கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கோதாவரி ஆற்றின் வளமையைக் கம்பர் பலபடப் பேசுகின்றார்.
            சான்றோர்கள் படைத்த கவிதைகள் சொல்நலம், பொருள்நலம், இசைநலம் கொண்டு உயிர்களுக்கு நன்மை செய்கின்றதோ அதுபோன்று கோதாவரி ஆறு நன்மை செய்கிறது என்று கம்பர் கோதாவரியின் நீரோட்டச் சிறப்பினைக் கவிதையோட்டச் சிறப்பினுடன் ஒப்பு வைத்துப் பாடுகின்றார். அவர் ஒப்பு வைத்த நிலையைப் பின்வருமாறு பொருத்திக்காட்ட இயலும்.
கவிதை
            புவியில் தோன்றும் கவிகள் அணி பெற்றுத் திகழ்கின்றன. ஆன்ற பொருள் தரக்கூடியது அகத்துறைகளைப் பாடக் கூடியது. ஐந்திணை நெறிகளைப் பாடவல்லது. அழகுற விளங்குவது. இனிய ஒழுக்கத்தைப் பாடுவது.
கோதாவரி
            கோதவாரி ஆறு புவிக்கு ஒரு அணிகலம் போன்றது. அது பல பொருள்களைத் தன்னுள் கொண்டுள்ளது. பல படித்துறைகள் கொண்டது. குறிஞ்சி முதலான ஐந்து நிலங்களைத் தழுவி ஓடுவது. இனிய நீரோட்டம் உடையது.
            இவ்வாறு இரட்டுற மொழியும் நிலையில் கவிதையையும் பாராட்டி, நீரையும் பாராட்டும் சிறப்பில் கம்பர் கவிதை யாத்துள்ளார். அக்கவிதை பின்வருமாறு.
புவியினுக்கு அணி ஆய் ஆன்ற பொருள் தந்துஇ புலத்திற்று ஆகி
அவி அகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி
சவி உறத் தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவி சான்றோர்
கவி என கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.  (சூர்ப்பனகைப் படலம், பாடல்எண். 1)
            கோதவரி ஆறு, ஒரு பெண்ணாக நின்று தன் அலைக்கரங்களால் மலர்களை வீசி இராம, சீதை, இலக்கவரை வரவேற்கிறதாம். கோதாவரியில் தாமரை மலர்களும் குவளை மலர்களும் பூத்துக்குலுங்குகின்றன. இன்னும் பல நீர்ப்பூக்கள் மலர்ந்துள்ளன. தாமரை ஆகிய முகத்தில் கருங்குவளை போன்ற கண்களைக் கொண்டு நீர்கொடி போன்று கோதாவரி ஆறு விளங்குகின்றது. அது தன் அலைக்கரங்களால் இராம குழுவினரை வருக வருக என்று சொல்லி மலர் தூவி வரவேற்கும் நிலையில் உள்ளதாகக் கம்பர் உருவகம் செய்கிறார்.
வண்டு உறை கமலச் செவ்வி வாள் முகம் பொலிய வாசம்
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின்
தெண் திரைக் கரத்தின் வாரிஇ திரு மலர் தூவி செல்வர்க்
கண்டு அடி பணிவது என்னஇ பொலிந்தது கடவுள் யாறு.  (சூர்ப்பனகைப் படலம் 2)
அதே நேரத்தில் கோதாவரி ஆறு தன் துன்பத்தையும் வெளிப்படுத்துகிறதாம். குவளை மலர்களில் நீர்த்துளிகள் காணப்படுகின்றன. அவை கோதாவரியின் கண்ணீர்த்துளிகளாக விளங்குகின்றனவாம். இராம குழுவினரின் நாடுவிட்டு காடு வந்த நிலையை எண்ணி, ஏங்கி ஏங்கி அழுவதாகவும் கோதவரியின் ஓட்டம் இருந்தது என்கிறார் கம்பர்.
எழுவுறு காதலரின் இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கி
பழுவ நாள் குவளைச் செவ்விக் கண் பனி பரந்து சோர
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி
அழுவதும் ஒத்ததால் அவ் அலங்கு நீர் ஆறு மன்னோ.  (சூர்ப்பனகைப் படலம், 3)
இவ்வாறு பாடல்கள் தோறும் இயற்கை நலம் கொழிக்கும் வகையில் பஞ்சவடியின் இருப்பினைக் காட்டுகிறார் கம்பர்.
            இதன்பின் இராமனும், சீதையும் பஞ்சவடியின் இயற்கை அழகைக் கண்டு மகிழ்கின்றனர். அவர்களின் கண்கள் வழி கண்ட இயற்கை நலத்தைக் கம்பர் நான்கு பாடல்களில் காட்டியுள்ளார்.
            கோதாவரி ஆற்றில் சக்கரவாளப் பறவைகள், தாமரை மலர்கள் போன்றன நிறைந்திருந்தன. தாமரை மலர்களில் சக்கரவாளப் பறவைகள் படுத்துக்கிடந்தன. இந்தக் காட்சியைக் கண்டு சீதையை நோக்கினான் இராமன். அவளின் மார்பழகினைக் கண்டு அவன் மகிழ்ந்தான். சீதையோ அவனின் நீலமணி போன்ற குன்று போன்ற தோள்களைக் கண்டாள்.
நாளம் கொள் நளினப் பள்ளி நயனங்கள் அமைய நேமி
வாளங்கள் உறைவ கண்டு மங்கைதன் கொங்கை நோக்கும்
நீளம் கொள் சிலையோன்; மற்றை நேரிழை நெடிய நம்பி
தோளின்கண் நயனம் வைத்தாள் சுடர் மணித் தடங்கள் கண்டாள்.
(சூர்ப்பனகைப் படலம் 4)
என்று கம்பரின் கவிதை இராமனின் சீதையின் பார்வைகளைப் பதிவுசெய்கின்றது.
ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும்
சீதைதன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான்;
மாதுஅவள்தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிஇ புதியது ஓர் முறுவல் பூத்தாள். (சூர்ப்பனகைப் படலம. 5)
 கோதாவரி ஆற்றில் அன்னங்கள் மெல்ல நீந்தியும் நடந்தும் விளையாடின. அவற்றின் நடையையும் சீதையின் நடையையும் ஒன்று வைத்துப் பார்த்து இராமன் மகிழ்ந்தான். இதன் விளைவாய் அவனின் வாயினின்று புதிய சிரிப்பு தோன்றியது.
            அவளும் கோதாவரி ஆற்றில் நீர் உண்டு மீண்டு செல்லும் யானையின் நோக்கி அதனை இராமனின் நடையுடன் ஒப்பு வைத்து புதிய முறுவல் பூத்தாள்.
            மேலும் இராமன் கோதாவரி ஆற்றில் கொடிகள் மடங்கி ஆடிச் செல்வதைக்கண்டான். அவற்றின் காட்சி சீதையின் இடையின் தோற்றத்தைப் பார்க்கச் செய்தது. சீதை நீரில் மலர்ந்த தாமரையைக் கண்டாள். அக்காடசியில் இராமனின் தாமரை வடிவினைக் கண்டாள்.
வில் இயல் தடக் கை வீரன் வீங்கு நீர் ஆற்றின் பாங்கர்
வல்லிகள் நுடங்கக் கண்டான் மங்கைதன் மருங்குல் நோக்க
எல்லிஅம் குவளைக் கானத்து இடை இடை மலர்ந்து நின்ற
அல்லிஅம் கமலம் கண்டாள் அண்ணல்தன் வடிவம் கண்டாள். (சூர்ப்பனகைப் படலம்.6)
என்ற நிலையில் இராமனும் சீதையும் இயற்கையுடன் பிறரது அழகைக் கண்டு மகிழ்ந்தனர். இதனால் இயற்கையும் சிறந்தது. அவர்களின் நினைவெழுச்சியும் சிறந்தது.
            இதன்பிறகு இலக்குவன் இயற்கைப் பொருள்களைக் கொண்டு கட்டிய பர்ணசாலைக்குச்சென்றனர். அவன் அமைத்த பூஞ்சாலையில் மகிழ்ச்சியுடன் இருக்க விழைந்தனர் என்ற நிலையில்  கம்பர் பஞ்சவடியின் நலத்தை எடுத்துரைக்கிறார்.
அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர்
பனி தரு தெய்வப் ‘பஞ்சவடி’ எனும் பருவச் சோலைத்
தனி இடம் அதனை நண்ணி தம்பியால் சமைக்கப்பட்ட
இனிய பூஞ் சாலை எய்தி இருந்தனன் இராமன். இப்பால் (சூர்ப்பனகைப் படலம் 7)
            இப்பாடலில் இனிய பூஞ்சோலையை இலக்குவன் புனைந்த நிலையைக் கம்பர் பாடுகின்றார். இயற்கை அன்னை தந்த இயற்கைச் செல்வங்களை வைத்து இராம சீதையர் தங்கும் இடம் மிகக்குளிர்ச்சியுடன் கட்டப்பெற்றுள்ளது.
            மனிதன் இருக்கும் இடம் இயற்கை சார்ந்து இருக்கும் நிலையில் அது இனிமை பயப்பதாகவும்,அமைதி தருவதாகவும் உள்ளது என்பதற்குப் பஞ்சவடி ஒரு எடுத்துக்காட்டு. ஒரு குறியீடு.

--------------------------------------------------------------------------------------
https://puthu.thinnai.com/?p=39271

ம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணை

முனைவர் மு. பழனியப்பன்

தமி்ழ்த் துறைத்தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருவாடானை

kamban Raman
                          

கடலில் கட்டப்பட்ட பழமையான பாலங்களுள் ஒன்றாக விளங்குவது இராமர் கட்டிய சேதுப்பாலம் ஆகும். வால்மீகி இராமாயணத்தில் இப்பாலம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. கம்பராமாயணத்திலும் இப்பாலம் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. நாசா என்ற அமெரிக்க நிறுவனம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே பழங்காலத்தில் கடல்வழிப் பாலம் இருந்ததாக செயற்கைக்கோள் வரைபடத்தைச் சான்றாகக் காட்டுகின்றது. இசுலாமிய சமயத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே ஆதாம் பாலம் என்றொரு பாலம் இருந்ததாகக் குறிப்பு உள்ளது.
இராமர் இந்தியாவிலிருந்துப் புறப்பட்டு இலங்கை அடைந்து சீதையை மீட்டுவந்தார் என்ற கருத்தின்படி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே பாலம் கட்டப்பட்டிருக்கிறது என்பது தொன்மவியல் அடிப்படையிலும், இக்கால தடய அறிவியல் அடிப்படையிலும் நிகழ்ந்துள்ளது என்பது உறுதியாகின்றது.
கம்பராமாயணத்தில் இராமர் பாலம் கட்டுவதற்கான முன் முயற்சிகளை எடுக்கிறார். வருணனை அழைத்துக் கடலை வற்றச் செய்யும்படி கேட்கிறார் இராமர். ஆனால் வருணனோ எண்ணில்லா உயிர்கள் இக்கடலில் வாழ்கின்றன. கடலை வற்றச் செய்வதால் அவை அழிந்து போக நேரும். எனவே ~கடல் மீது பாலம் கட்டிச் செல்க| என்று உரைக்கின்றான். தங்களால் கடல்மேல் கட்டப்படும் பாலத்தை எந்த இடைய+றும் வராமல் நான் பல்லாண்டுகள் காத்து நிற்பேன் என்று வருணன் மொழிகின்றான்.
கல் என வலித்து நிற்பின்
கணக்கு இலா உயிர்கள் எல்லாம்
ஒல்லையின் உவந்து வீயும்
இட்டது ஒன்று ஒழுகாவண்ணம்
எல்லையில் காலம் எல்லாம்
ஏந்துவென் எளிதின் எந்தாய்
செல்லுதி சேது என்று ஒன்று
இயற்றி என் சிரத்தின் என்றான்|| (பாடல். 6801)
என்ற இந்தப் பாடலில் வருணன்தான் முதன் முதலில் சேது என்ற பாலத்தை நிர்மாணிக்க இராமனுக்கு யோசனை கூறுவதாகக் காட்டப்பெற்றுள்ளது. மேலும் கடல் உயிரினங்கள் அழியாமல் காக்கும் வருணனின் சிந்தனை கம்பரின் சிந்தனை என்று கொள்வதில் தவறில்லை.
இதனை ஏற்றுக் கொண்ட இராமன் வானர சேனைகளைப் பார்த்துக் கடலில் பாலம் கட்ட ஆணையிடுகின்றான்.
நன்று இது புரிதும் அன்றே
நனிகடல் பெருமை நம்மால்
இன்று இது தீரும் என்னின்
எளியவரும் ப+தம் எல்லாம்
குன்று கொண்டு அடுக்கி
சேது குற்றுதிர் என்று கூறிச்
சென்றனன் இருக்கை நோக்கி
வருணனும் அருளிச் சென்றான்.||( 6802)
குன்றுகளை அடுக்கிச் சேதுபாலம் கட்ட இராமன் ஆணையிட்ட செய்தி கம்பராமாயணத்தில் இவ்வாறு குறிக்கப்படுகிறது. குன்றுகளை அடுக்கி, சேது பாலத்தை ஆழமாக நாட்டுவீர் என்பது இப்பாடலின் அடிப்படை பொருளாகும்.
இந்தத்திட்டத்தை நிறைவேற்ற சுக்ரீவனின் அவையில் உள்ள கட்டிடக் கலை வல்லவனான நளன் அழைக்கப்படுகிறான். வானரத் தச்சனான நளன் ~கடலில் பாலம் கட்ட வேண்டும் என்பது தானே என் பணி| என்று ஏற்று அதனைச் செய்ய முனைகின்றான். குறித்த காலத்தில் அதனை முடிக்கும் எண்ணத்துடன் அவன் செயல்பாடுகளைத் திட்டமிடுகிறான். வானரக் கூட்டங்களை மலைகளை எடுத்து வரக் கட்டளையிடச் சொல்லுகின்றான்.
காரியம் கடலினை அடைத்துக் கட்டலே
சூரியன் காதல சொல்லி யென்பல
மேருவும் அணுவும் ஓர் வேறு உறாவகை
ஏர் உற இயற்றுவென் கொணர்தி என்றான்|| ( 6805)
என்ற இந்தப் பாடலில் மேரு மலைகளும் மற்ற மலைகளும் மிகச் சிறு அணுவாக வேறாகதபடி ஒன்றிணைத்து நான் கடலில் அணைக கட்டுவேன் என்று நளன்; குறிப்பிடுகின்றான்.
வானரங்கள் பற்பல மலைகளைக் கொண்டு வந்துச் சேர்க்கின்றன. அவற்றை வாங்கி நளன் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்குகின்றான். அடுக்கிய மலைகளிலிருந்து மண் கரையாமல் ஒழுகாமல் வருணன் காக்கின்றான்.
முடுக்கினன் தருக என்று மூன்று கோடியர்
எடுக்கினும் அம்மலை ஒருகை ஏந்தியிட்டு
அடுக்கினன் தன் வலி காட்டி ஆழியை
நடுக்கினன் நளன் எனும் நவையில் நீங்கினான் (6810)
என்ற இப்பாடலில் நளனின் அணைகட்டும் சிறப்பு சுட்டப்படுகின்றது. நளனின் ஒரு கை மலைகளை வாங்குகிறது. மற்றொரு கை அவற்றை அடுக்குகிறது என்று அணைகட்டப்படும் அழகைக் கம்பர் காட்டுகின்றார்.
நளன் செய்த செயல்களை மற்றொரு பாடல் குறிக்கின்றது.
குலை கொளக் குறி நோக்கிய கொள்கையன்
சிலைகள் ஒக்க முறித்துச் செறித்து நேர்
மலைகள் ஒக்க அடுக்கி மணற் படத்
தலைகள் ஒக்கத் தடவும் தடக்கையால்||( 6848)
என்ற இந்தப்பாடலில் கடலில் அணை கட்டும் தொழில் நுட்பத்தை எடுத்துரைக்கிறார் கம்பர். மலைக்கற்களைச் சமமாக உடைத்து ஒன்றோடொன்று பொருந்த நெருக்கியும் நேரான மலைகளை ஒத்திருக்கும்படி அடுக்கியும், மலைகளின் மேல்புறம் ஒத்திருக்கும்படி மணலைக் கொண்டு மட்டம் செய்தும் அணையை நளன் கட்டினான் என்று கம்பர் குறிப்பிடுகின்றார்.
மேலும் மற்றொரு பாடலில்
தழுவி ஆயிர கோடியர் தாங்கிய
குழுவி வானரர் தந்த கிரிக்குலம்
எழுவின் நீள் கரத்து ஏற்றிட இற்று இடை
வழுவி வீழ்வன கால்களின் வாங்குவான்||(6849)
என்ற இந்தப்பாடலில் நளனின் அணைகட்டும் திறம் இன்னும் சிறப்பிக்கப்படுகிறது. கணைய மரம் போல தன் கைகளால் மலைகளை இடுக்கி அணைணை நளன் கட்டினான் என்ற இச்செய்தி அவன் மலைகளை அடுக்கி மரங்களை இடை இடையே கணைய மரங்களாகச் செருகிப் பாலம் கட்டினான் என்பதைப் புலப்படுத்துகின்றது.
உற்றதால் அணை ஓங்கல் இலங்கையை
முற்ற மூன்று பகல் இடை முற்றவும்
வெள்ள ஆர்ப்பு விசும்பு பிளந்ததால்
மற்று இவானம் பிறிது ஒரு வான்கொலோ (6867)
என்ற பாடல் நளன் பாலம் கட்டி முடித்ததைக் குறிப்பிடுகின்றது. மூன்று பகலில் அணை கட்டி முடிக்கப்பெற்றுள்ளது என்பது கம்பர் வாக்கு.
எய்தி, யோசனை ஈண்டு ஒரு நூறு உற
ஐ இரண்டின் அகலம் அமைந்திடச்
செய்ததால் அணை என்பது செப்பினர்
வையநாதன் சரணம் வணங்கியே||(6873)
என்ற இப்பாடல் அணையின் அகலம், நீளம் ஆகியவற்றை உரைப்பதாக உள்ளது, ஒரு நூறு யோசனை நீளமும், பத்து யோசனை அகலமும் கொண்டு இவ்வணை கட்டப்பெற்றுள்ளது என்பது கம்பர் வானரத் தலைவர்கள் வழியாக இராமனுக்கு அறிவிக்கும் அணை பற்றிய செய்தியாகும்.
இவ்வணையின் மீது இராமன் பயணிக்கின்றான். இதனைக் கம்பர் பின்வரும் பாடலில் காட்டுகின்றார்.
நெற்றியில் அரக்கர் பதி செல்ல நிறைநல்நூல்
கற்று உணரும் மாருதி கடைக்குழை வரத் தன்
வெற்றிபுனை தம்பியொரு பின்பு செல வீரப்
பொன் திரள்புயக் கருநிறக் களிறு போனான்|| ( 6878)
என்று இராமர் பாலத்தில் நடந்த காட்சியைக் கம்பர் வருணிக்கின்றார். நெற்றிப் பகுதியான முன்பகுதியில் வீடணன், நிறைவுப் பகுதியில் அனுமன், தம்பி இலக்குமன் உடன் வர களிறு போல இராமன் அணையைக் கடந்தான் என்ற இந்தக் காட்சி இலங்கை வெற்றிக்கு முன் உதாரணம் ஆகின்றது.
இவ்வாறு கடலில் பாலம் கட்டும் முறைமையை, தொழில் நுட்பத்தைக் கம்பர் பாடுவதன் வாயிலாக அவர் கடலில் அணைகட்டும் தொழில் நுட்பத்தை அறிந்து அதனைப் பாடியுள்ளார் என்பது தெரியவருகின்றது. இதன் காரணமாக கம்பரின் கடல்சார் அறிவும், அணைகட்டும் திறனும் வெளிப்படுகின்றன. கம்பரின் கடல் அணை அமைக்கும் ஆளுமையை இப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. இதன்வழி கம்பரின் பன்முக ஆளுமையில் ஒரு முக ஆளுமையாக கடலில் பாலம் கட்டுதல் என்ற ஆளுமை வெளிப்பட்டு நிற்கின்றது. கம்பர் கட்டிய கடலணை திருமாலின் பாம்பணைக்கு நேரானது என்று ஒப்புவைக்கப்படுகிறது.
நாடுகின்றது என் வேறு ஒன்று நாயகன்
தோடுசேர் குழலாள் துயர் நீங்குவான்
ஓடும் என் முதுகிட்டு என ஓங்கிய
சேடன் என்னப் பொலிந்தது சேதுவே (6868)
என்ற பாடலில் ஆதிசேடன் போல சேது கிடந்ததாம். ஆதிசேடனாகிய திருமாலின் பாம்பணை இங்குக் கம்பரின் கடலணையாகின்றது. ஆதிசேடனாகிய தான் அணையாக இருக்க இராமன் ஏன் மற்றொரு அணையை நாடுவது என ஆசிசேடனே சேது அணையாகக் கிடந்தான் என்று இப்பாடல் குறிப்பிடுகின்றது.
திருமால் எப்போதும் பாம்பணையில் இருப்பவன். இங்கு இராமன் அணையில்லாமல் இருப்பதன் காரணமாக சேது பாம்பணையாக மாறுகின்றது. கவிஞன் பாலம் பற்றிய கற்பனை அறிவியலை, தொன்மத்தை, அறத்தை, உதவியை எல்லாவற்றையும் சேர்த்து வலிமை தரத்தக்கது என்பது இதன்வழி தெரிகின்றது.

---------------------------------------------------------------------------------------------------

Comments